Oct 25, 2018

“தாலாட்டு கேட்காத தாய் மடி” விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்.


வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது. தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த வடமாகாண சபை.

தமிழர்களின் விடுதலைக்காக ஓங்கி, ஒலித்துக் கொண்டிருந்த ஜனநாயகக் குரல்களும்,போர்க்களத்தில் வெடித்துக் கொண்டிருந்த துப்பாக்கிகளும் மௌனித்து விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு சூழலிலே 2013 வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.

போரை வெற்றி கொண்டதில் தெற்கில் நிலவிய செருக்குத்தனமும், விடுதலைப் போர் வீழ்த்தப்பட்ட வேதனையில் வடக்கில் ஒலித்த ஒப்பாரிகளும் இரண்டு தேசியங்களையும் வெவ்வேறு துருவங்களில் விழிப்பூட்டின. இப்பின்னணி குறிப்பாக வடக்கில் தமிழ் தேசியத்தை வீறு கொண்டெழச் செய்து போரின் வீழ்ச்சிக்குப் பரிகாரம் தேட வைத்தது. தமிழ் சமூகத்தின் இந்த விழிப்பும், வேதனையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மிகப் பெரும் மக்கள் சக்தியை தேடிக் கொடுத்தது.
தேர்தலில் யாரை நிறுத்தியிருந்தாலும் த.தே.கூ அமோக வெற்றியீட்டியிருக்கும். இதற்காக கல்விமானையோ? அல்லது திறமையாளனையோ தேடி கூட்டமைப்பு அலைந்திருக்கத் தேவை இல்லை.

இதேபோன்ற ஓர் உணர்வுச் சூழல் ஒரு காலத்தில் கிழக்கிலும் மேலாங்கி இருந்ததது.முஸ்லிம் காங்கிரஸ் 1989 முதல் 1994 வரை கிழக்கில் தூண்டிவிட்டிருந்த முஸ்லிம் தேசியம் தொர்பான உணர்ச்சிக் கோஷங்கள், மரச்சின்னத்தில் எவரை நிறுத்தினாலும் அமோக வெற்றிக்கு வித்திட்டு சென்றது. தமிழர்களின் உணர்ச்சிகள் மேலெழுந்து, தமிழ் தேசியம் தோல்வியின் விளிம்பில் நின்ற காலத்தில் போரின் அடித்தளத்தில் நின்று களமாடி கட்சிக்காகவும், சமூகத்துக்காகவும் போராடிய எத்தனையோ தளபதிகள் இருக்கையில் வெளியிலிருந்து விக்னேஸ்வரனைக் கொண்டு வந்தது ஏன்?

அரசியல் என்பது மக்களின் நாடி பிடித்தறிந்து பணியாற்றும் ஒரு துறை. பழைய அனுபவசாலிகளைப் புறந்தள்ளி படித்த மேதையைப் பதவியில் அமர்த்திய, பாவத்தை ஐந்து வருடங்களாக அனுபவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேதனைப்பட்டுள்ளார்.

வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நிகராக அல்லது பலமாக எந்தக் கட்சியும் இல்லாத சூழலில் ஒரு பலமான வேட்பாளரை தேடிய வினையை மட்டுமல்ல, கட்சிக்குள் இருந்த பொருத்தமான வேட்பாளர்களை சரியாக, அடையாளம் காணத் தவறியதற்கான விளைவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுபவிக்க நேரிடும். விக்னேஸ்வரன் தமிழராக இருந்தாலும் தமிழ் தேசியத்தின் வாடையில் வளரவில்லை.

கொழும்பில் சட்டத் துறையில் பணியாற்றிய அவர் சிங்களப்பின் புலத்தின்,பெரும்பான்மைச் சூழலுக்குப் பழக்கப்பட்டவர். தமிழர்களின் வலியை தனது இனமென்ற வகையில் ஓரளவு அறிந்திருந்தாலும் போராட்டத்தின் புறச் சூழலைப் புரிந்து கொள்ள, விக்கிக்கு சந்தர்ப்பம் வாய்த்திருக்காது.

போர்ச் சூழல் பற்றிய அனுபவமும், அறிவுமே வட மாகாண முதலமைச்சருக்குத் தேவையாகவுள்ள முதலாவது தகைமை. இதைக்கூடப் புரியாத பாவத்திற்கான பழியைத்தான் இந்த ஐந்து வருடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுபவித்துள்ளது.
ஐந்து வருட காலத்தில் தமிழருக்காக எதைச் செய்தார் விக்னேஸ்வரன் என்ற கேள்விகளில் முஸ்லிம்களுக்கு, எதையும் செய்திருக்கமாட்டார் என்ற பதில்களுமுள்ளன. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சரியாகத் தரவில்லை என்கிறார் விக்கி. தந்திருந்தால் வடக்கில் வசந்தம் தழைத்தோங்கியிருக்குமா? தனது அமைச்சரவையுடன் முரண்பட்டதில் காலம் கடத்தியதிலே திட்டமிட்டுக் கிடந்த அபிவிருத்திகள் தடைப்பட்டு,பல நிதிகள் திரும்பியிருந்தன.

ஒரு மாகாண சபையைக் கூட சரியாக நடத்தத் தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு ஒரு தனித்தமிழ் ஈழத்தை வழிநடத்தும் எனக் கேலிக்கேள்வி தொடுத்த சிங்களத் தேசம், தனிநாட்டை ஆள்வதற்கான தகுதி தமிழர்களிடம் இல்லை என்கின்ற இமேஜை வளர்ப்பதில் கவனம் செலுத்தியதையும் நாம் அவதானிக்க வேண்டும்.
எனவே சிங்களப் புலத்தில் வளர்ந்த விக்னேஸ்வரன் தெற்கின் சிந்தனைக்கு தீனிபோட்ட வேலையைத்தான் செய்துள்ளார் . இவ்வாறு செய்த இவர், மிதவாத சிந்தனைகள், அரசுக்கு அழுத்தம் கொடுக்காத போக்குகள் தமிழ் தேசியத்தை மலினப்படுத்தும் எனக்கூறி கடும் போக்கு நிலைப்பாட்டை கையிலெடுத்தார். விக்கியின் இந்த கடும்போக்கு நிலைப்பாடே வடமாகாண அமைச்சரவைக்குள் வெடிப்பை ஏற்படுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இல்லாது வேறு கட்சியில் போட்டியிட்டு ஒரு பிரதேச சபைத் தேர்தலில் கூட விக்கியால் வெல்ல முடியாது. அந்தளவுக்கு தமிழ் தேசியத்தை வடக்கு, கிழக்கில் விழிப்பூட்டி வேரூன்றச் செய்தது, தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்.

மாவைக்குத் தெரியாத கடும்போக்கு,சம்பந்தனுக்குப் புரியாத அழுத்த அரசியல் விக்கிக்கு எப்படிப்புரிந்தது. டயஸ்போராக்களின் வழிகாட்டலில்,விக்கி வளர்க்கப்படுகிறார் என்பதற்கு இதுதான் அத்தாட்சி.
வடபுல முஸ்லிம்கள் விடயத்திலும் விக்கியைப் பாராமுகமாக்கியதும் இவரின் கடும் போக்குவாதமே. கடும் போக்கிற்குப் பின்னால் தோற்றுப் போன புலிகளின் சிந்தனைகளும் உயிரூட்டப்படுகின்றன.

ஈழப்போரின் கடைசி யுத்தத்தில் நந்திக்கடலில் நடந்த இன அழிப்பை, இனப்படு கொலையாகத் தீர்மானம் நிறைவேற்றியது வடமாகாண சபை, வடமாகாண செயலணியை நிராகரித்த விக்னேஸ்வரன் நிர்வாகம், வட புல முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் திட்டமிட்ட இன அழிப்பு எனப் பிரேரணை நிறைவேற்றி இருக்கலாம். புலிகளின் சிந்தனைக்குப் பின்னாலுள்ள கடும்போக்கு வாதத்துக்கு இது இயலாத காரியமாயிருந்திருக்கும். ஆகக் குறைந்தது இனவெறியுடன் வெளியேற்றப் பட்ட வடபுல முஸ்லிம்களை மீள வருமாறு அழைக்கும் பிரேரணையையாவது வட மாகாண சபை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல கொண்டச்சியில் அமைக்கப் படவிருந்த கைத்தொழில் பேட்டைக்கு பெரும் இடைஞ்சலாக செயற்பட்டு காலத்தை இழுத்தடித்தமை, யாழ், முல்லைத்தீவில் மீளக்குடியேற முனைந்த முஸ்லிம்களுக்கு காணி வழங்காது முட்டுக்கட்டைப் போட்டமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் மீதான பாரபட்சப் போக்குகள் இழையோடியிருந்தன.

ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிழையான தெரிவு வட மாகாணத்திலுள்ள இரு சமூகங்களையும் ஐந்து வருடங்களாக அலைக்கழிக்க வைத்துள்ளாதாகவே தோன்றுகிறது.


- சுஐப் எம் காசிம்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network