”அமைச்சர் ரிசாத் பதியுதீனை கொலை செய்ய திட்டம் ”

கைத்தொழில் வணிக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீனைக் கொலை செய்து, தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து துசார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியது தொடர்பாக இரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து துசார பீரிஸ் என்பவர் வழங்கிய பணிப்புரை மற்றும் பணம் அனுப்பப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தலைவர்களை தாக்கி தமிழ்-முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்றும் இது குறித்து தமிழ் - முஸ்லிம் மக்கள் பீதி கொள்ளத்தேவையில்லை எனும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் இந்த விசாராணை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்ததாவது, நாமல் குமாரவின் வாக்குமூலங்கள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, உரையாடிய காணொளி நீதிமன்ற உத்தரவின் படி அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்தக் காணொளியில் குறிப்பிடப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதவிப் பொலிஸ் அத்தியட்சக உட்பட சகலரிடமும் மூலங்கள் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தேவையான சில ஆவணங்களும் பெறப்பட்டுள்ளன, அத்தோடு இது தொடர்பாக கொழும்பு மஜிஸ்திரேட் நீதவானுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இரகசியப் பொலிஸாரின் விசாரணை தொடர்கிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...