காத்தான்குடியின் கதாநாயகர் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார்

அஷ்ஷஹீத் அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை அவர்கள் 14.10.1935 இல் காத்தான்குடி மூன்றாம் குறிச்சியில் பிறந்தார்கள். 

மட்டக்களப்பு நகரின் பிரபல வர்த்தகர் அலியார் லெப்பை - கதீஜா தம்பதிகளின் மகனான இவர் 1955 ஆம் ஆண்டு இருபதாவது வயதில்  யூசுப் ஹாஜியாரின் மகள் கதீஜா அவர்களை திருமணம் செய்து மூன்று ஆணும் இரண்டு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார்.

  ஆரம்பக் கல்வியை காத்தான்குடி 5 ம் குறிச்சி பழைய தெரு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (தற்போதைய அல்ஹிறா மகா வித்தியாலயம்) யில் மேற்கொண்டதுடன் 1948 ம் ஆண்டில் காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பில் இணைந்து தமது கல்வியை தொடர்ந்தார்.1952 ம் ஆண்டு ஆங்கில மொழி மூலம் S.S.C பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார்.அதன் பின்னர் அரசாங்க பொது எழுது வினைஞர் பரீட்சைக்குத் தோற்றி அதிலும் சித்தியடைந்தார்கள்..

இப் பரீட்சையில் சித்தியடைந்ததால் செங்கலடி D.R.O அலுவலகத்தில் எழுது வினைஞராகக் கடமையாற்றும் வாய்ப்பை பெற்றார்.

பாடசாலையில் கல்வி பயிலும் போதே பொதுப்பணியில் ஆர்வம் காட்டிய அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்கள் மார்க்க விடயங்களிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவராகவும் சிறுவயதிலேயே அல் குர் ஆனைத் திருத்தமாக ஓதக் கூடியவராகவும் திகழ்ந்தார்.

அரசியலிலும் , சமூக நலன் சார்ந்த விடயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்கள் 1958 ம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார். அக்காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பின்னர் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலெல்லாம் அவ்வட்டாரத்தில் போட்டியின்றி தெறிவுசெய்யப்பட்டார். 
பின்னர் 1975- 1977 வரை பட்டின ஆட்சிமன்ற முறை நீக்கப்படும் வரையில் பட்டின ஆட்சிமன்ற தலைவராக பதவி வகித்தார்.

இலங்கையில் இனப்பிரச்சினை உருவான பின்னர் முஸ்லிம்களுக்கு தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனிக்கட்சி ஒன்றின் அவசியம் பற்றி சிந்தித்த போது அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களின் வழிகாட்டலில் பல முஸ்லிம்,தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேட்கொள்ளப்பட்டதுடன் அன்னாரின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் மர்ஹூம் டாக்டர் யூ.அப்துர் ரஹ்மான் அவர்களது பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம் தனிக்கட்சி தொடர்பில் ஆறாயப்பட்டது. அக்கூட்டத்தில் கட்சியின் பெயர் தொடர்பில் ஆலோசிக்கப்பட்ட போது சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் பி.ஏ அவர்கள் "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்" என்ற பெயரை பிரேரித்தார்கள். 

இதன் பின்னர் 21.09.1980 இல்  காத்தான்குடி 1 ம் குறிச்சியில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடங்கி வைக்கப்பட்டது.

அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களினால் 1985 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிறுவனமானது காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய ஊர்களின் நலன்களை நோக்காகக் கொண்டு இன்று வரை இயங்கி வர்கிறது..

அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களின் சமூக, சமய,கல்வி ,இலக்கிய.,அரசியல் பணிகள் முழு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் வரப்பிரசாதமாகும்.

1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஜாமிஅதுல் பலாஹ்வில் இடம்பெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு வீடு செல்லும் வழியில் காத்தான்குடி 4 ம் குறிச்சியும் 3 குறிச்சியும் இணையும் சந்தியில் அந்த தலைவனின் உயிர் பறிக்கப்பட்டது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்)

காத்தான்குடி மக்களுக்கு மாத்திரம் இன்றி முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் ஒரு சாணக்கியத் தலைவரை இழந்த துக்கத்தில் துவண்டது..
  இந்த தலைவனின் இழப்பை இன்று வரை ஈடுசெய்ய முடியாமல் முஸ்லிம் சமூகம் அனாதைகளாக அவதிப்படுகிறது..

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தை நிரந்தர தங்குமிடமாக ஆக்குவானாக.


- எம்.பஹ்த் ஜுனைட்

(அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்கள் தொடர்பிலான பதிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டது)

ஒத்துழைப்புக்கு நன்றி -
மர்சூக் அஹ்மத் லெப்பை (மகன்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...