Oct 16, 2018

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.   
சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது.   
உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து கொண்டு, தமது மக்களிடமிருந்து, அரசாங்கம் அபகரித்த காணிகளை, விடுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   
ஆனால், அரசாங்கத்தில், முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கத்தக்க நிலையில், அவர்களுடைய சமூகத்தவர்களின் காணிகளை, அரசாங்கம் அபகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்களாக இருப்பதில், முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு என்ன பலன் என்கிற கேள்வி முக்கியமானதாகும்.  
இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். அதனால், பேரினவாதத்தின் பார்வை எப்போதும், இந்த மாவட்டத்தில் கூர்மையாக இருந்து கொண்டே இருக்கிறது.  
 அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்களை, சிங்களவர்களுக்கு அடுத்ததாக, இரண்டாவது நிலைக்கு, சனத்தொகை அடிப்படையில் மாற்றுவதற்கான திட்டங்கள், மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றன.   
பெரும்பான்மை இனத்தவர்களை, அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டுக் குடியேற்றுதல், கள்ளக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், முஸ்லிம்களின் காணிகளை அபகரித்தல், அவற்றைச் சிங்களவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல சூழ்ச்சிகளை, கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் மேற்கொண்டுதான் வந்துள்ளன.  
வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்குத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் மூலம், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. திடீரென முளைக்கும் புத்தர் சிலைகளும் இராணுவ முகாம்களும் கூட, முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளைக் கைப்பற்றிக் கொண்ட கதைகள் ஏராளமுள்ளன.   
அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றபோதும், அவர்களிடம், தங்கள் விகிதாசாரத்துக்கு ஏற்ப காணிகள் இல்லை. இங்கு, சிங்களவர்களே, அதிகளவு காணிகளைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், முஸ்லிம்களின் காணிகள் தொடர்ந்தும், அபகரிப்புக்குள்ளாகி வருகின்றன.  
சம்மாந்துறை, கரங்கா வட்டைப் பகுதியில், சில தினங்களுக்கு முன்னர், முஸ்லிம்களின் 65 ஏக்கர் நெற்காணிகளைச் சிங்களவர்கள் அபகரிக்க முயன்றனர்.   
 1940ஆம் ஆண்டுகளில், சம்மாந்துறை, கரங்கா வட்டைப் பகுதிகளில் காடுகளை வெட்டி, காணிகளைச் சொந்தமாக்கிக் கொண்டு, அவற்றில் நெற்செய்கையில் முஸ்லிம்கள் ஈடுபடுட்டு வந்தனர்.   
2013ஆம் ஆண்டு வரை, இது தொடர்ந்தது. 2013ஆம் ஆண்டு, இந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டமை காரணமாக, இங்கு நெற்செய்கை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  
இந்த நிலையிலேயே, கடந்த சில நாள்களுக்கு முன்னர், முஸ்லிம்களின் மேற்படி காணிகளுக்குள் பெரும்பான்மை இனத்தவர்கள், உட்புகுந்து நெற்செய்கை மேற்கொள்ளும் நோக்கத்துடன், உழவு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில், முஸ்லிம்கள் முறைப்பாடு செய்தார்கள். இதன் பின்னர், அங்கிருந்து பெரும்பான்மை இனத்தவர்கள் பின்வாங்கி உள்ளதாகவும் தெரியவருகிறது.  
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளுக்குள், இவ்வாறு அத்துமீறும் தைரியத்தை, இவர்களுக்கு யார், அல்லது எது வழங்கியது என்கிற கேள்விகளுக்கான பதில், இங்கு முக்கியமானதாகும்.   
அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் மக்களின் காணிகளை, இவ்வாறு அரச நிர்வாக இயந்திரங்களும், பேரினவாதிகளும் அபகரித்த போதெல்லாம், முஸ்லிம் அரசியல் தலைமைகள், கையாலாகாதவர்களாக இருந்தமையின் விளைவுதான், இப்போது இந்த நிலைவரத்துக்குப் பிரதான காரணமாகும்.  
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆலிம்சேனை (பின்னர் அஷ்ரப் நகர் என பெயர் மாற்றப்பட்டது) கிராமத்திலிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான, 130 ஏக்கர் காணி, 2009ஆம் ஆண்டு அபகரிக்கப்பட்டபோது, இந்த மாவட்டத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடவில்லை. இதன்  விளைவுதான், இப்போது சம்மாந்துறை, கரங்கா வட்டையில், கை வைப்பதற்கான தைரியத்தைப் பேரினவாதிகளுக்கு வழங்கியுள்ளது.  
ஆலிம்சேனை கிராமத்தில், 69 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்த, 130 ஏக்கர் பரப்பளவுள்ள காணியைச் சுற்றி, 2009ஆம் ஆண்டு, வனவிலங்குத் திணைக்களத்தினர் யானை வேலி இட்டனர்.   
பின்னர், 2011ஆம் ஆண்டு, யானை வேலி இடப்பட்ட பகுதிக்குள் இராணுவத்தினர் வந்து, முகாம் அமைத்தனர். யுத்தம் முடிவடைந்த பிறகு, இந்தப் பகுதியில், இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கான தேவைகள் எதுவும் இருக்காத நிலையிலேயே, இங்கு இராணுவ முகாம் உருவாக்கப்பட்டதாக மக்கள் அப்போது கூறினார்கள்.   
இதன் பின்னர், மேற்படி 130 ஏக்கர் காணிகளுக்கும் சொந்தமான 69 முஸ்லிம் குடும்பங்களில் கணிசமானோர், அங்கிருந்து வெளியேறினார்கள். தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, அங்கு தொடர்ந்தும் வாழ்வதற்கு முயன்ற குடும்பங்களை, இராணுவத்தினர் அடித்து, விரட்டினார்கள். இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.   
ஆலிம்சேனையில் இவ்வாறு காணிகளை இழந்த மக்களுக்கு, இன்னும் எதுவித நியாயங்களும் கிடைக்கவில்லை; இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. இது, நடந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் தாண்டி விட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் போராடிக் களைத்துப் போய் விட்டார்கள்.   
ஆயினும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குமாறு, ஆலிம்சேனை மக்கள் அவ்வப்போது கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றபோதும், ஆன பலன் எதுவுமில்லை.  
ஆலிம்சேனை விவகாரத்துக்கு முன்னதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொன்னன்வெளி பகுதியில், சுமார் 600 ஏக்கர் நெற்செய்கைக் காணிகளை, முஸ்லிம்கள் இழந்த கதையொன்றும் உள்ளது.   
1940ஆம் ஆண்டுகளில், காடுகளை வெட்டி பொன்னன்வெளி காணிகளை அங்குள்ள முஸ்லிம்கள் சொந்தமாக்கிக் கொண்டு, அவற்றில் விவசாயம் செய்து வந்தார்கள். அதற்கிணங்க, 1950 ஆம் ஆண்டில் 80 பேருக்கும், 1974ஆம் ஆண்டில் 150 பேருக்கும் பொன்னன்வெளியில் காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   
இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தீகவாபி விகாரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், 1987ஆம் ஆண்டு ‘புனித பூமி’ ஆக்கப்பட்டன. 
அதையடுத்து, முஸ்லிம்களுக்குச் சொந்தமான 600 ஏக்கர் பொன்னன்வெளிக் காணிகள், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. பின்னர், வெளிப் பிரதேசங்களிலிருந்து, தீகவாபியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள், அந்தக் காணிகளை அபகரித்து, விவசாயத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.  
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சராக இருந்த காலகட்டத்தில், பொன்னன்வெளியில் காணிகளை இழந்தவர்களுக்கு, மீளவும் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.   
ஆனால், இறுதிக் கட்டத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதற்குப் பின்னர், எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவரும், இது தொடர்பில் வலுவான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
இதுபோன்று, பொத்துவில் பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் காணிகள், பறிபோயிருக்கின்றன. குறிப்பாக, வனப்பாதுகாப்புத் திணைக்களமும், வனவிலங்குத் திணைக்களமும் தொல்பொருள் திணைக்களமும் முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பதில் முன்னின்று செயற்படுவதாக, பொத்துவில் பிரதேச மக்கள், தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  
இந்தச் சூழ்நிலையில்தான், இறக்காமம் பிரதேசத்தில், முஸ்லிம்களின் நெற்செய்கைக் காணிகளுக்கு இடையில் அமைந்துள்ள மாயக்கல்வி மலையில், 2016ஆம் ஆண்டு புத்தர் சிலையொன்று, அடாத்தாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டது.   
இப்போது, அந்தப் புத்தர் சிலையை அடிப்படையாக வைத்து, பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அம்பாறை மாவட்டத்தை வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களோ, இதுவரையில், இவற்றுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.  
முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தேர்தல் காலங்களில் ஆட்சியாளர்களுடன், ஆட்சிக்கு வரப்போகின்றவர்களுடன் நடத்துகின்ற பேரம் பேசுதலின் போது, முஸ்லிம்களிடமிருந்து அரசாங்கம் அபகரித்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை, ஒருபோதும் முன்வைத்ததாகத் தெரியவில்லை.   
தமக்கும், தமது கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகளையும் பணப்பெட்டிகளையுமே முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டார்கள் என்கிற புகார்கள்தான் இன்னும் இருக்கின்றன.   
அரச இயந்திரங்கள் மூலம், தமிழ்ச் சமூகத்தவர்களிடமிருந்து,  அபகரிக்கப்பட்ட காணிகளில், பெருந்தொகையானவை விடுவிக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டுதான், இதைச் சாதித்துள்ளனர். அதனால்தான், இதை ‘விசித்திரமான அரசியல்’ என்று, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.   
ஒரு சமூகம், தனக்கான நிலத்தை இழப்பதென்பது மிகவும் ஆபத்தானதாகும். நிலமற்ற ஒரு சமூகம், தேசிய இனத்துக்கான அடையாளத்தை, உரிமையைக் கோருவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன.   
இன்னொருபுறம், நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தின் இழப்பு, வலிகள் குறித்து, தமிழர் சமூகம், அனுபவத்தின் மூலம் மிக நன்றாக அறிந்தும் வைத்துள்ளது. அதனால்தான், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை, மீளவும் பெற்றுக் கொள்வதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.  
ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இந்த அக்கறையைப் போதியளவு காண முடியவில்லை.  தமக்குரிய சி‌றிய சிறிய சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே, அரசாங்கத்தை எதிர்க்கத் துணியாத மக்கள் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு, தாம் இழந்த நிலங்களை முஸ்லிம் சமூகம் மீளவும் பெற்றுக் கொள்ளலாம் என யோசிப்பது, சரி எனத் தெரியவில்லை.  
அரசியலை வியாபாரமாகப் பார்க்கின்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தால், தனது நிலத்துக்கான உரிமைப் போராட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பது, கடைசி வரை, கனவாக மட்டும்தான் இருக்கும். கடந்த கால வரலாறுகள், இதற்கு உதாரணங்களாகும்.   
முஸ்லிம் அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கம், தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகளான எதிர்க்கட்சியினர் முன்பாக, மண்டியிடுவதன் மர்மம் என்ன என்பதை, முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ளாமல், இவ்வாறான இழப்புகளைத் தடுக்கலாம் என நினைப்பதும், ஓட்டை வாளியை வைத்துக் கொண்டு, நீரிறைக்க முயல்வதும், கிட்டத்தட்ட ஒன்றுதான்.  
- முகம்மது தம்பி மரைக்கார் (Tamil Mirror)

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network