சுற்றுலா துறையின் மூலம் கூடுதலான வருமானம்!

அம்பாரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்துறை வளங்களைக் கொண்டு இம் மாவட்டத்தில் வாழும் மக்கள் மிகக் கூடுதலான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும் என சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

இமோஷனல் இன்ரலிஜன்ஸ் என்ட் லைப்ஸ்கில் ரெய்னிங் ரீம் (ஜீரிஈ) லிமிட்டட் மாளிகைக்காடு றிசப்சன் மண்டபத்தில் அண்மையில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வேலை இல்லாத ஆண், பெண்களை விசேடமாக வலது குறைந்தோரை ஒன்றிணைத்து பயிற்சி வழங்கி, திறன் விருத்தி செய்து தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது சம்மந்தமான கருத்தரங்கில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கமும், அவுஸ்ரேலிய அரசாங்கமும் இணைந்து திறன் விருத்தி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டம் சம்மந்தமாக மேற்படி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாத் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மேலும் அவர் உரையாற்றுகையில் - அம்பாரை மாவட்டம் இலங்கை சுற்றுலாத்துறையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் மிகக் கூடுதலாக காணப்படுகிறது. பாரம்பரிய கைத்தொழில்கள் முதல் அழகிய கடற்கரைகள் என அனைத்தும் அமையப் பெற்றுள்ளது. ஆனால் உல்லாசப் பிரயாணிகளை கவரும் விதமாக எவ்வித செயற்பாடுகளும் இங்கு ஏற்படுத்தப்படவில்லை. சாதாரணமாக விளங்கக் கூடிய பெயர்ப்பலகைகள் கூட அமைக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் எங்கு சென்று எதனை ரசிக்க வேண்டும் என்கிற வழிகாட்டல்கள் குறைவாகவே உள்ளது. தலைநகருக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் அங்கு உள்ளவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சில இடங்களுக்குச் சென்றுபார்த்துவிட்டு ஏனைய இடங்களுக்கு செல்லாமல் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

எமது நாட்டில் அனைத்து மாவட்டங்களும் உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடமாகத்தான் இருக்கின்றது. அதற்கு முறையான வழிகாட்டுதல்களும், சந்தைப்படுத்தல்களும் தேவையாக உள்ளது. அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அழகான நீரோடைகள் மிகவும் அசுத்தமாகக் காணப்படுகிறது. அவற்றை சுத்தப்படுத்தி அதனை உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் விதமாக அமைக்க முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட பிரதேசத்தின் உள்ளுராட்சி மன்றமோ, மக்களோ மிகக் கூடுதலான வருமானத்தை பெற முடியும். இதற்கு முறையான சுற்றுலா திட்டங்களை வகித்து செயற்படுத்த முடியும். இங்கு தங்களுக்கு மிகக் கூடுதலான வருமானங்களை பெறும் வழிகளை விட்டுவிட்டு சிறிய சிறிய தொழில்களை செய்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.



இங்கு இருக்கும் சுற்றுலா வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான செயற்றிட்டங்கள் மூலம் விழிப்பூட்டப்படவேண்டும். நேரடியாக அம்பாரை மாவட்டத்திற்கு வருகைதரும் அளவிற்கு விழிப்பூட்டப்படுவதன் மூலமே இங்கு சுற்றுலா பிரயாணிகள் வருகை தருவார். இதன் மூலம் தொழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகள், குறிப்பாக வலது குறைந்தோர் தொழில் வாய்ப்பை பெற்று திகழ முடியும் என்றார். இங்கு இமோஷனல் இன்ரலிஜன்ஸ் என்ட் லைப் ஸ்கில் ரெய்னிங் ரீம் (ஜீரிஈ) லிமிட்டட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சாமிர் சாலி, அம்பாரை மாவட்ட திட்ட இணைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் மற்றும் பல ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

-M.L.Sarifdeen, JP
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்