மக்களுக்கு நீர் இணைப்புகள், சேவைகளை  வழங்குவதற்கு பிரதேச பொறியியலாளர் அலுவலகங்கள் (Area Engineer Office) பல இருக்கின்றன. இந்த அலுவலகங்களை முகாமை செய்வதற்கே பிராந்திய முகாமையாளர் அலுவலகம் (RM office) தேவைப்படுகின்றது.

ஏற்கனவே அம்பாரையிலும் அக்கரைப்பற்றிலும் இரு பிராந்திய முகாமையாளர் அலுவலகங்கள் (RM Office) இருக்கையில், ஒரே மாவட்டத்தில் இப்போது மூன்றாவது பிராந்திய முகாமையாளர் அலுவலகத்திற்கான தேவை ஏன் வந்தது என்ற கேள்வி எழுகிறது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், சிறிய நிலப் பரப்பிற்குள் அதிகமான பிராந்திய முகாமையாளர் அலுவலகங்கள் இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

பொது நன்மையை விடவும், அரசியல் காய்நகர்த்தலே இதன் பின்னணியில் செல்வாக்குச் செலுத்துவதை உணர முடிகிறது. இது நிர்வாகத் தேவைக்காக செய்யப்பட்டதல்ல என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, படிப்படியாக அதன் இயங்குநிலையை முடக்க எடுக்கப்படும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

தனது அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்த விடயத்தில், அனாவசியமாக உள்ளூர் அரசியலை முடிச்சுப் போடும் அரசியல் தந்திரமே இது.

சம்பந்தப்பட்ட பலரோடு தொடர்பு கொண்டு பேசியதில், இந்த வாதத்திலுள்ள தர்க்க நியாயங்களை மறுக்க முடியாதுள்ளது. எதிர்காலத்தில் கரையோரப் பிரதேச பிராந்திய முகாமையாளர் அலுவலகங்கள் மூடப்பட்டு, அம்பாரை அலுவலகம் மட்டுமே மிஞ்சும் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இன்றுள்ள இனவாதச் சூழலில் இதற்கான சாத்தியங்களை மறுதலிப்பதற்கில்லை.

பிழையான அரசியல் தீர்மானங்கள், மக்களது வாழ்க்கையோடு விளையாடி, பாரிய பின்விளைவுகளை உருவாக்கும் என்பதற்கு ஒலுவில் துறைமுகம் தக்க சான்றாகும். ஒரு மீனவக் கிராமம் அழிக்கப்பட்டு தடமிழந்து போயிருக்கிறது. இப்போது அந்தத் துறைமுகத்தை நிறுத்த வேண்டும் என்று, அதைக் கொண்டு வந்த மு.கா. வே கேட்கிறது.

இதேபோலத்தான், போதிய நியாயங்களின்றி ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகங்களை உருவாக்கி, பேரினவாத அரசியலுக்கு அதைப் பேசுபொருளாக மாற்றப் போகிறார்கள். 

இருக்கிற பிரச்சினைகள் போதாததற்கு, புதிய பிரச்சினைகளை வலிந்து உருவாக்குவது அரசியல் நாடகமேயன்றி வேறென்ன? இதைவிட மு.கா. அக்கறை கொள்வதற்கு வேறு பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளன.

இதுபோன்ற அரசியல் இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை மு.கா. மட்டுமல்ல, ஏனைய அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றமை ஒன்றும் புதிதல்ல. நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் இதற்கு நல்ல உதாரணம். வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு விடயங்களில் இப்படி பொறுப்புணர்ச்சியின்றி நடந்து கொண்ட பல உதாரணங்கள் உள்ளன.

கட்சி நலன்களை விட, பொது நன்மையை நோக்கி செயற்படும் கலாச்சாரத்தையே நாம் ஊக்குவிக்க வேண்டும்.  எல்லா அரசியல் கட்சிகளும் இந்த அணுகுமுறையைக் கைக்கொள்வதே பொருத்தம்.

அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையே இது.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).

Share The News

Post A Comment: