வடக்கு, கிழக்கு: பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

2018 ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். 

சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றி இருந்தனர். 

மாகாண சபைகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் வெற்றிடங்களை பூரணப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. 

கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது மாகாண முதலமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்தார். 

வறுமையை இல்லாதொழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முதன்மை செயற்திட்டமான கிராமசக்தி தேசிய செயற்திட்டத்தின் குறிக்கோள்களை உரியவாறு நிறைவு செய்ய சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். 

2400 குளங்களை புனரமைக்கும் செயற்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. 

அப்பிரதேச மக்களின் காணிக்கான உரிமையை உறுதி செய்து முதன்முறையாக அவர்களுக்கு நிரந்தர காணி உறுதியினை வழங்குவதற்கும் வீடமைப்பு திட்டத்தினை வினைத்திறனான முறையில் செயற்படுத்துவதற்கும் ஜனாதிபதி வழங்கும் பங்களிப்பு தொடர்பில் பெருந்தோட்ட மக்களின் சார்பாக அமைச்சர் பி.திகாம்பரம் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்