புத்தளம் குப்பை விவகாரம்;பாதிப்பு ஏற்படாதென அரசு மீண்டும் உறுதி

- மக்களுடன் பேசி சமரசத் தீர்வு காண்பதே அரசின் இலக்கு

- பெரு நகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பு


அருவக்காளுவில் குப்பை கொட்டுவதன் மூலம் சுற்றாடலுக்கோ அங்கு வாழும் மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு நேற்று (15) மீள உறுதிபடத் தெரிவித்தது.

அவ்வாறு பாதகமேதும் ஏற்பட்டால், அமைச்சு பொறுப்பேற்கும் என்று அதன் செயலாளர் பொறியியலாளர் நிஹால் ரூபசிங்க நேற்று தெரிவித்தார். அப்பகுதிவாழ் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்றும் அவர் கூறினார்.

சுமார் 125 மில்லியன் டொலர் செலவிலான இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வருடம் மற்றும் மூன்று மாத காலம் தேவைப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக நான்கு ரயில்களுக்கான இயந்திரங்கள் மற்றும் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குப்பைகளை சுகாதாரமான முறையில் சுத்திகரிக்கும் இப்பணியினால் அப்பகுதி மக்களுக்கோ, சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் உருவாகாது என்பதற்கான உத்தரவாதத்தை அமைச்சு வழங்குவதாக சுட்டிக்காட்டிய அவர், இது சம்பந்தப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் துறைசார்ந்த முறையில் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

மேலும், இக்குப்பை சுத்திகரிக்கும் பணிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளால் முன்னெடுக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இச்செயற் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 25 முதல் 80 வருடங்கள் வரை சிறப்பான முகாமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்காக இராணுவவீரர்கள், பொறியியலாளர்கள் கொண்ட முகாமைத்துவக் குழுவொன்று இப்பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள குப்பைகளை அறுவாக்காட்டில் சுகாதாரமான முறையில் சுத்திகரிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது இச்செயற்திட்டம் குறித்து விளக்கமளிக்குகையிலேயே அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் குப்பையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சுத்திகரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுமே தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் களப்பு நீருடன் கலக்க விடமாட்டோம் என உத்தரவாதம் அளித்த அமைச்சின் செயலாளர், இதனால் உப்பளங்களின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் அநாவசியமாக அச்சம் கொள்ளத் தேலையில்லையென்றும் தெரிவித்தார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடனேயே இதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதேவேளை, அப்பிரதேசத்திலிருந்து மீதென் வாயு வெளியேறாதவாறு அவை உடனுக்குடன் சுத்திகரிக்கப்படுமென்றும் கழிவுகள் முறையாக மூடப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதற்கு வாய்ப்பில்லையென்றும் அவர் உறுதியளித்தார்.

"மீதொட்டமுல்லையில் நடந்ததுபோல் அறுவைக்காட்டில் குப்பைகளைக் கொட்டிவிட்டு போகமாட்டோம். மீதொட்டமுல்ல மற்றும் புளுமண்டாலில் போன்று குப்பைமேடு அறுவைக்காட்டிலும் உருவாகினால் சுற்றாடல் மற்றும் சுகாதாரத்துக்குச் சீர்கேடு ஏற்படும் என்பதே மக்களின் அச்சமாகவுள்ளது. அறுவாக்காட்டில் அதுபோன்ற குப்பைமேடு உருவாகாது," என்றும் அவர் விளக்கமளித்தார்.

"கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகள் யாவும் களனியில் பிரிக்கப்பட்டு, மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படாதவை தவிர்ந்த ஏனையவை முறைப்படி பசளையாக்கிய பின்னரே அறுவைக்காட்டுக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும். இதற்கென விசேடமாக நான்கு ரயில்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம். இப்பசளைகளை இடுவதற்காக விசேடமாக மண்ணைத் தோண்ட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை."

"சுண்ணாம்பு கற்கள் அகழ்வுக்காக ஏற்கனவே இப்பிரதேசத்தில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதற்குள்ளேயே சுகாதாரமான முறையில் பசளைகள் நிரப்பப்படும். அனைத்தும் ஒ​ரே இடத்தில் நிரப்பப்பட மாட்டாது. வெவ்வேறு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ள நில அறைகளுக்குள் கட்டம் கட்டமாகவே இவை நிரப்பப்படும். ஓர் அறைக்குள் சுமார் மூன்று மீற்றர் வரை பசளைகளை நிரப்பியதும், அடுத்த அறைக்குள் நிரப்ப ஆரம்பிப்போம். இதுவே மிகச் சிறந்த சுத்திகரிப்பு முறையென விஞ்ஞானிகளும் சுழலியலாளர்களும் உறுதி செய்துள்ளனர்," என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, சுத்திகரிக்கப்படும் கழிவு நீர் ரயில் பெட்டிகள் மற்றும் வாகனங்களைக் கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் அதேநேரம் மழை நீர் குப்பைகளுடன் சேராத வகையில் விசேட கால்வாயூடாக தாங்கி யொன்றில் சேர்க்கப்பட்டுப் பின்னர் களப்புடன் கலப்பதற்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்படுமென்றும் விளக்கமளித்தார்.

குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு வருடத்துக்கு பில்லியன் ரூபாய் தேவைப்படுமென்பதால் அச்செயற்திட்டம் எமது நாட்டுக்குப் பொருத்தமற்றதென்றும் அதனால் இத்திட்டமே மிகவும் சிறப்பானதாக அமையுமென்றும் தெரிவித்தார்.

மீதொட்டமுல்லயில் இதுபோன்ற எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படாததன் காரணமாகவே பாரிய சேதத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவானது என்றும் அவர் கூறினார்.

குப்பைகளைச் சுகாதாரமான முறையில் கழிவகற்றுவதற்கு மிகச் சிறந்த தெரிவு அறுவைக்காடு என 1998 ஆம் ஆண்டே உலக வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. குறைவான மழைவீழ்ச்சி, குறைந்த சனத்தொகை மற்றும் இயற்கையான தரையமைப்பு காரணமாக அப்பிரதேசமே இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமையுமென்பது இதற்குரிய பிரதான காரணமாக அமைந்தது.

மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்தினாலும் அறியாமை மற்றும் தெளிவின்மை காரணமாக இதில் மக்கள் பங்கெடுக்காமை கவலைக்குரிய விடயமென சுட்டிக்காட்டிய செயலாளர், எவ்வாறானபோதும் சளைக்காமல் அமைச்சின் மட்டத்தில் மாதாந்தம் இது பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், இதில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவது ஏன்? என கேள்வி எழுப்பியதற்கு, அரசாங்க அதிகாரியென்ற வகையில் அதற்கான பதில் தன்னிடம் இல்லையெனத்தெரிவித்த செயலாளர் இது முற்றிலும் துறைசார்ந்ததொரு செயற்திட்டமென்றும் விளக்கமளித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த மொறட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் மஹேஸ் ஜயவீர, "கழிவு நீர் நிலக்கீழ் நீருடன் கலக்காத வகையில் சர்வதேச தரம் வாய்ந்த

முறையில் இச்செயற்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 25 தொடக்கம் 80 வருடங்கள் வரை உத்தரவாதம் அளிக்க முடியும். நிலத்தின் கீழ் இரண்டு சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கழிவு நீர் நிலக்கீழ் நீருடன் கலக்காததனை உறுதி செய்யலாம். அதற்கு நான் 200 சதவீத உத்தரவாதம் வழங்குவேன்," எனத் தெரிவித்தார்.
புத்தளம் குப்பை விவகாரம்;பாதிப்பு ஏற்படாதென அரசு மீண்டும் உறுதி புத்தளம் குப்பை விவகாரம்;பாதிப்பு ஏற்படாதென அரசு மீண்டும் உறுதி Reviewed by NEWS on October 16, 2018 Rating: 5