கல்குடாத்தொகுதியின் அமைப்பாளர் யார்? : சர்ச்சைக்கு அமைச்சர் ஹக்கீம் முற்றுப்புள்ளி

அண்மைக்காலமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் மாற்றப்பட வேண்டும், புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்ட வேண்டுமென்ற பல்வேறுபட்ட கருத்தாடல்கள் அது தொடர்பிலான வதந்திகள், சர்ச்சைகள் கல்குடாவில் பரவிக்கொண்டிருக்கின்றது. 

இது தொடர்பில் தலைவரோ அமைப்பாளரோ உத்தியோகபூர்வமாக எந்தவித அறிக்கையும் வெளியிடாத நிலையில், பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் அமைப்பாளர் றியாழ் தலைமையிலான அணி பெற்ற வரலாற்று வெற்றியைத்தொடர்ந்து பலரது கண்ணும் அமைப்பாளர் பதவி மீது திரும்பியமை மறுக்க முடியாத உண்மையாகும்.  

இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழுக்குமிடையிலான விஷேட சந்திப்பு கடந்த 02.10.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது, இச்சந்திப்பில் அமைப்பாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் விரிவாகக்கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத்தெரிவித்த தலைவர், அமைப்பாளர் மாற்றம் தொடர்பில் கட்சியின் கல்குடாத்தொகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சியின் போராளிகளோ எவ்விதமான கோரிக்கைகளையும் என்னிடம் முன்வைக்கவில்லை என்பதுடன், தானும் அமைப்பாளர் மாற்றம் தொடர்பில் எந்த விடயங்களையும் பிரதேச சபை உறுப்பினர்களிடம் பேசவில்லை.

கல்குடாத்தொகுதியின் அமைப்பாளரை மாற்றுவதற்கு தனக்கு எவ்வித எண்ணமுமில்லை எனக்கூறிய தலைவர், றியாழ் அவர்களே தொடர்ந்தும் கல்குடாத்தொகுதியின் அமைப்பாளராக இருந்து கட்சிப்பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், கல்குடாவில் கட்சிப்பணிகளை முன்னெடுக்க தான் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதோடு, பிரதேச சபை உறுப்பினர்களும், போராளிகளும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை தன்னிடமுள்ளதாகவும் தெரிவித்தார்.

றியாழின் திறமை, ஆளுமை, தனது துறையில் அடைந்திருக்கும் வளர்ச்சியை பாராட்டியப் பேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், இதுவொரு சாதனை. இதனால் கல்குடாத்தொகுதிக்கு பெருமை. அனைத்து திறமை, தன்மைகளும் மக்களுக்குரிய சேவையாக மாற்றப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத்தில் கல்குடாவில் அபிவிருத்திகளை முன்னெடுத்தது போன்று எந்தத்தடையுமின்றி தொடர்ச்சியாக அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு தனது அமைச்சினூடாக நிதியொதுக்கீடு, ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அமைப்பாளரிடம் உறுதியளித்ததுடன், எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸுடாக பிரதிநிதியைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகள், பங்களிப்புகளையும் கட்சி வழங்கத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமைப்பாளர் றியாழுக்கும் தலைவருக்கிடையிலான சந்திப்பு சிநேகபூர்வமானதாக இடம்பெற்றதுடன், கல்குடாவின் அபிவிருத்தி, முன்னேற்றம் தொடர்பில் மேலும் பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்குடாத்தொகுதியின் அமைப்பாளர் யார்? : சர்ச்சைக்கு அமைச்சர் ஹக்கீம் முற்றுப்புள்ளி கல்குடாத்தொகுதியின் அமைப்பாளர் யார்? : சர்ச்சைக்கு அமைச்சர் ஹக்கீம் முற்றுப்புள்ளி Reviewed by NEWS on October 08, 2018 Rating: 5