கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கல்முனை மாநகரசபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி எ.எம்.றக்கீபுக்கு எதிராக மாநகரசபை உறுப்பினர்கள் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டம் திங்கட்கிழமை (1) மாலை இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையில் 41 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியெனக்கூறப்படும் 25உறுப்பினர்கள் மேயருக்கு எதிராக கையொப்பமிட்டு குற்றச்சாட்டு மகஜரையும் கொண்டுவந்திருந்தனர்.

மாநகரசபையில் இடம்பெற்றுவருவதாகக்கூறப்படும் பலகோடிருபா பெறுமதியான நிதிமோசடிகள், நடைமுறைக்குமாறான சர்வாதிகாரச் செயற்பாடுகள், பாரபட்சங்கள், நிதிநிலையியற்குழுவினதோ பொதுச்சபையினதோ அங்கீகாரமின்றி தன்னிச்சையான செயற்பாடு, கேட்டால் சொல்லமுடியாது என சர்வாதிகாரப்பதில் இப்படி பல குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டுப்பத்திரம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 6மாதங்களில் மாதாந்தக்கூட்டங்கள் நடைபெற்றிருந்தும் இதுவரை எந்தக்கூட்டத்திலும் மாதாந்த வரவுசெலவுஅறிக்கை மற்றும் வேலைத்திட்ட முன்னேற்ற அறிக்கை என எதுவுமே சபைக்கு சமர்பிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்முனை மாநகரசபையில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா)க்கு 12ஆசனங்களும் சாய்ந்தமருது சுயேச்சைஅணிக்கு 9ஆசனங்களும் த.தே.கூட்டமைப்பிற்கு 7ஆசனங்களும் அ.இ.ம.காங்கிரசுக்கு 5ஆசனங்களும் த.வி.கூட்டணிக்கு 3ஆசனங்களும் தேசியகாங்கிரசுக்கும் நல்லாட்சிக்கான தேசியமுன்னணிக்கும் ஸ்ரீல.சு.கட்சிக்கும் சுயேச்சைக்குழு 2 மற்றும் 3க்கும் தலா ஒவ்வொரு ஆசனமும் கிடைத்தன.

ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெற்ற முதல் அமர்வில் த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த மு.கா ஆதரவுடனான ஜ.தே.கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து மேயராக எ.எம்.றக்கீப்பையும் சிலகட்சிகள் இணைந்து பிரதிமேயராக த.வி.கூட்டணியின் காத்தமுத்துகணேசையும் தெரிவுசெய்தது.

6மாதமுடிவில் இந்த 41உறுப்பினர்களில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா)யின் 12உறுப்பினர்கள் த.வி.கூட்டணியின் 3உறுப்பினர்களில் 2உறுப்பினர்கள் சுயேச்சையின் 1உறுப்பினர் உள்ளிட்ட 15உறுப்பினர்கள் மேயரின் பக்கம் உள்ளனர்.
ஏனைய 25உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

குறித்த உறுப்பினர்கள் கடந்தவாரம் திருமலைசென்று ஆளுநர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யச்சென்றிருந்தராயினும் அங்கு அவர் அன்று அவசரவேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த காரணத்தினால் அவர்கள் திரும்பிவரநேரிட்டது.

ஆனால் நேற்று(1) மட்டக்களப்பில் ஆளுநர் இருக்கிறார் என அறிந்ததும் இந்த எதிரணி உறுப்பினர்கள் 25பேரும் மட்டுநகருக்குச்சென்று ஆளுநர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.

பல்வேறு சுலோகங்களடங்கிய குறிப்பாக
ஹிட்லராக மாறலாமா கல்முனை முதல்வர்?
இடைக்காலவரவுச்செலவுத்திட்டம் எங்கே?
கழுத்தை வெட்டினாலும் கணக்கறிக்கையைக் காட்டாத மேயர்!
மாதாந்த கணக்கறிக்கையை மறுப்பதன் மர்மம் என்ன?

போன்ற சுலோகங்கள் அடங்கிய மும்மொழியிலான பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மாநகரசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்திலீபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஆளுநர்அலுவலகத்தினுள் சென்று அவரைச்சந்தித்து தமது முறைப்பாட்டு மகஜரை கையளித்தனர்.
ஆளுநரும் வாசித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட உறுப்பினர் ஒருவர் கூறுகையில் ஆளுநரிடம் உரிய நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம். தவறினால் அடுத்து பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்திப்போம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...