மைத்திரி கொலை முயற்சி- ரோ, ரணில் பிண்ணனியில்!

தம்மை கொலை செய்ய இந்தியாவின் ரோ புலனாய்வு அமைப்பு திட்டமிடுவதாக இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெ ஹிந்து செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளதாக தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்கமாட்டார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள ஜனாதிபதியின் ஊடகப்பிரிவை தொடர்புக்கொண்ட போதும் அச்சுக்கு செல்லும் வரை அந்தப்பிரிவு அந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்றும் ஹிந்து தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் இந்தக்குற்றச்சாட்டு இலங்கை இந்திய உறவில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு நாளை மறுநாள் செல்லவுள்ள நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் கொலை செய்ய திட்டமிடப்படுவதாக கூறி ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் என்றுக் கூறப்படும் நாமல்குமார என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் காவல்துறை அதிகாரி விடுமுறையில் அனுப்பப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த திட்டத்தை அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய பிரஜை ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.

இதற்கிடையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ரோ மீது குற்றச்சாட்டை முன்வைத்த மைத்திரிபால சிறிசேன, விசாரணை செய்யப்பட்டு வரும் இந்திய பிரஜை தம்மை கொலை செய்ய திட்டமிட்ட ரோவின் உறுப்பினராக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையின் எரிபொருள் குதம் தொடர்பான விடயத்தில் இந்திய தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியபோது அதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படவில்லை.

ஏற்கனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு இது தொடர்பில் உறுதிமொழியை வழங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இதன்போதே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தபோதும் பின்னர் அது கைவிடப்பட்டதாக ஹிந்து தெரிவித்துள்ளது
மைத்திரி கொலை முயற்சி- ரோ, ரணில் பிண்ணனியில்! மைத்திரி கொலை முயற்சி- ரோ, ரணில் பிண்ணனியில்! Reviewed by NEWS on October 17, 2018 Rating: 5