ஒலுவிலுக்கு நிரந்தர தீர்வைக் கோரி திரண்டெளுந்த மக்கள்!


ஒலுவில் துறைமுகத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்ற வேண்டாம் என்று ஒலுவிலில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று (12)இடம்பெற்றது. 

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதான வீதியுடாக துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலைச் சென்றடைந்தனர். இப்போராட்டத்தில் ஒலுவில் பிரதேச மீனவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து கொண்டு செயற்பட்டனர்.

ஒலுவில் துறைமுகத்திலுள்ள மண்ணை அகற்றுவதால் ஒலுவில் பிரதேசத்திற்கு பாரிய சேதம் ஏற்படுவதுடன் ஒலுவில் கிராமத்தை கடல் காவுகொள்வதாக மக்கள் தெரவித்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

மண்ணை அகற்றுவதால் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று அரசு எழுத்து மூலம் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுவருவோர் தெரிவித்தனர்.இதே நேரம் மண்ணை அகற்ற வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மீனவர்கள் போராட்டம் செய்தோர் நீதிமன்ற உத்தரவுக்கமைய அவ்இடத்தைவிட்டு வெளியேறியுள்ளார்கள்.

ஒலுவில் துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கொட்டிலில் இருந்து 7 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் இணைந்து கொள்வதற்காக ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலருந்து பிரதான வீதியுடாக பாரிய பேரணி சென்றது.

துறைமுகத்தில் படிந்துள்ள மண்ணை அகழ்வதனால் ஏற்கனவே பெரும்பகுதி கரையை இழந்துள்ள எமது கிராமம் மீண்டும் பாதிக்கப்படும் என்பதினாலூம், கரைவலை மற்றும் ஆழ்கடல் மீனவர்களின் தொழில் மற்றும் வாழ்விடம் என்பன பாதிக்கப்படும் என்ற வகையிலும், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுவதாலும், ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள இத்துறைமுகம் காணி, வீடு, தோட்டம் , தொழில் போன்ற பாரிய இழப்புக்களை இழந்த இம்மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கவில்லை என்பதாலுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

- ALM.Ihals & AK.Nasrullah

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...