மைத்திரிக்கு சம்மந்தன் அவசரக்கடிதம்!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பவர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒருவராக இருக்கின்றார்.

அத்துடன் இவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  இதனால் இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ, சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றனவா என்ற முரண்பாட்டினை தோற்றுவித்துள்ளது.

இதனை மேலும் எம்மால் சகித்துக்கொள்ள முடியாது. ஆகவே 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைக்க ஆதரவளிப்போம் என்றும், ஐக்கிய தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...