சரத்து 37(2) இன் கீழ் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஐ தே க இன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சரத்து கூறுவதென்ன?

சரத்து 37(1) இன் பிரகாரம், சுகயீனம், வெளிநாடு செல்லல் அல்லது வேறு ஏதும் காரணமாக ( or any other cause - இந்த சொற்றொடரை கவனமாகப் பார்க்கவும் - இந்த தலைப்பின் முழுக்கேள்வியும் பிரதானமாக இந்த சொற்றொடரிலேயே தங்கியிருக்கின்றது) தனது கடமையைச் செய்யமுடியாதபோது, பிரதமரை அக்கடமையைச் செய்வதற்கும் இன்னுமொரு அமைச்சரை பதில் பிரதமராகவும் நியமிக்கலாம்.

பிரதம அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளபோது, அல்லது பிரதமர் செயற்படமுடியாதபோது சபாநாயகரை தனது கடமைகளைச் செய்ய நியமிக்கலாம்.

சரத்து 37(2)- மேலே சரத்து 37(1) இன் பிரகாரம் ஜனாதிபதி தற்காலிகமாக தன் கடமைகளைச் செய்யமுடியாதென்றும் அதேநேரம் பிரதமரையோ அல்லது சபாநாயகரையோ தன் கடமையைக் கவனிக்க “நியமிக்க முடியாத” ( இந்த சொற்றொடரையும் சற்று ஊன்றி கவனிக்கவும்) நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்; என்றும் சபாநாயகருடன் கலந்தாலோசித்தபின் பிரதம நீதியரசர் அபிப்பிராயப்படுவாரானால் அவரது அந்த அபிப்பிராயத்தை சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.

அதன்பின் அந்த ( தற்காலிக ) “ காலப்பகுதிக்குள்” பிரதமர் ஜனாதிபதியின் கடமைகளைச் செய்யவேண்டும். இன்னுமொரு அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க வேண்டும்.

பிரதம மந்திரி பதவி அப்பொழுது வெற்றிடமாக இருந்தாலோ அல்லது பிரதமர் செயற்பட முடியாமல் இருந்தாலோ, சபாநாயகர் ஜனாதிபதியின் கடமைகளை அந்தக் காலப்பகுதியில் ஆற்றவேண்டும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியவை:

37(1) இன் பிரகாரம் ஜனாதிபதி தனது கடமைகளைச் செய்யமுடியாமலும் ஒரு பதில் ஜனாதிபதியை நியமிக்க முடியாமலும் இருக்கின்றார்; என சபாநாயகருடன் பிரதம நீதியரசர் கலந்தாலோசித்ததன்பின் பிரதம நீதியரசர் அபிப்பிராயப்படல் என்பது முதலாவது விடயம். அவ்வாறு அபிப்பிராயப்பட்டால்தான் பதில் நியமனம் என்ற ஒன்று இடம்பெறும்.

இங்கு ஜனாதிபதி தன் கடமைகளைச் செய்யமுடியாமல் இருப்பதற்கான காரணங்கள் 37(1) இன் பிரகாரம் ‘ சுகயீனம், வெளிநாடு செல்லல் அல்லது வேறு ஏதாவதொரு காரணம்’ ஆகும். சுகயீனம், வெளிநாடு செல்லல், என்பது தற்போது காரணமல்ல.

அவ்வாறாயின் ‘ வேறு ஏதாவது காரணங்கள்’ என்பதற்குள் இன்றைய நாட்டு நிலைமையை உள்ளடக்க முடியுமா? அந்தக்காரணங்கள் தன் கடைமையைச் செய்யமுடியாமலும் பதில் ஜனாதிபதியை நியமிக்க முடியாமலும் தடுக்கின்றதா? என்ற இரண்டு கேள்விகள் இங்கு இருக்கின்றன.

அதாவது, வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். அதன்காரணமாக அவர் தன்பணியைச் செய்ய “முடியாமல்” இருக்கவேண்டும். “ செய்யாமல் இருப்பதல்ல”. அல்லது “செய்யாமல் இருப்பது” என்பது “ செய்யமுடியாமல் இருப்பது” என்றுதான் இந்த இடத்தில் அர்த்தப்படுத்த வேண்டும்; என்று வியாக்கியானம் கொடுக்கவேண்டும்.
நாட்டின் இன்றைய சூழ்நிலை

நாட்டின் இன்றைய சூழ்நிலையை மேற்படி சொற்பதங்களுக்குள் கொண்டுவரமுடியுமா? என்பது தொடர்பாக பார்ப்போம்.

கடந்த 26ம் திகதி இருந்த பிரதமர் நீக்கப்பட்டு புதிய பிரதமரும் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிக்கின்ற உரிமையும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கு இருந்தது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்து அந்த அதிகாரத்தை பாராளுமன்றம் செயற்படுத்துவதை ஜனாதிபதி தடுத்தார்.

பல போராட்டங்களின் பின் இரண்டுநாட்கள் முன்னதாக பாராளுமன்றைக் கூட்ட ஜனாதிபதி திகதி குறித்தார். அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தை கலைத்தார். நீதிமன்றம் அக்கலைப்பிற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. 14ம் திகதி மீண்டும் கூடிய பாராளுமன்றம் புதிய அரசின்மீது தமக்கு நம்பிக்கை இருக்கின்றதா? இல்லையா? என்பதை வெளிப்படுத்த முன்வந்தது.

நிலையியற்கட்டளையை ஏன் இடைநிறுத்த வேண்டும்?

நிலையியற்கட்டளையை ஏன் இடைநிறுத்தவேண்டும்? என்று கேள்வி கேட்பவர்களிடம் எழுப்பப்படவேண்டிய கேள்வி, நிலையியல் கட்டளையைத்தான் பின்பற்றவேண்டும்? என்று எந்த சட்டத்தில் இருக்கின்றது; என்பதாகும்.

பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குவது அரசியலைப்பு. நிலையியல் கட்டளையைப் பின்பற்ற அதிகாரம் வழங்கியது அதன் சரத்து 74. அது பின்வருமாறு கூறுகின்றது.

“Subject to the provisions of the Constitution, Parliament may by resolution or Standing Order provide for
(ii) the regulation of its business.....”

இங்கு resolution அல்லது Standing Order என்றுதான் கூறப்பட்டிருக்கின்றது. அதிலும் முதலாவது பாவிக்கப்பட்டிருக்கும் சொல் ‘ resolution ஆகும். அதேநேரம் நிலையியற்கட்டளையிலும் அதனை இடைநிறுத்துவற்கு இடமுண்டு. ( நிலையியற்கட்டளை இல 135)

எனவே, நிலையியிற்கட்டளையை இடைநிறுத்தியை சட்டரீதியாக யாரும் கேள்வி எழுப்பமுடியாது. பாராளுமன்றத்தின் இந்த சட்டரீதியான முடிவை கேள்வி எழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு என்ன உரிமை அல்லது அதிகாரம் இருக்கின்றது.

இந்தக்கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது அவர் இது குறித்து குறிப்பிடும்போது இவர்கள் கேட்டிருக்கவேண்டும், எந்தச் சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் முடிவைக் கேள்விக்குட்படுத்துகின்றீர்கள்? உங்களின் இந்தக் கேள்வி பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறுகின்றது; என்று ஏன் கூறவில்லை.

அல்லது ஆகக்குறைந்தது எந்தச்சட்டத்தில் நிலையியல்கட்டளை இடைநிறுத்தப்பட்டது; பிழை? சட்டம் பிழை என்று சொல்லாததை பிழை என்று சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் அளித்த சட்டம் எது? என்று ஜனாதிபதியை மாறிக்கேட்டிருந்தால் ஜனாதிபதிக்கு விளங்கியிருக்கும்; நாம் எங்கே நிற்கிறோம் என்று. ஆனால் போனவர்களின் குறிக்கோளெல்லாம் எப்படியாவது ஜனாதிபதியை சமாளித்து காரியம் வெல்வது.

இங்கே முதலாவது வெல்ல வேண்டியது காரியமல்ல. அரசியலமைப்பு. அதிகாரம் மக்களுடையது என்று சொல்லியிருப்பது அது. அதை மாற்றி அதிகாரம் ஜனாதிபதியினுடையது என்று நிறுவ முயற்சிக்கின்றார், ஜனாதிபதி.

நிலையியற்கட்டளையை இடைநிறுத்துவதற்கு சட்டரீதியாக எந்தக்காரணமும் தேவையில்லை. அது பாராளுமன்றத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. இருந்தாலும் நடைமுறையில் அவ்வாறு இடைநிறுத்துவதற்கு ஏதும் வலுவான காரணம் இருந்ததா? எனப்பார்ப்போம்.

நீதிமன்றத் தடையுத்தரவைத் தொடர்ந்து 14ம் திகதி பாராளுமன்றம் கூட இருந்தபோது 13ம் திகதி இரவு 12 மணிக்கு மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஒரு முஸ்தீபு இருந்ததாகவும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒரு நாளாவது கூடாமல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதில் உள்ள சட்டப்பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டபொழுது மீண்டும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடியதன்பின் ஒத்திவைக்க ஒரு முனைவு இருந்ததாகவும் அப்போது ஒரு செய்தி அடிபட்டதை 14ம் திகதி ஒரு பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

அதேநேரம் ஜனாதிபதியின் முன்னைய செயற்பாடுகளை நோக்கும்போது அவ்வாறான ஒரு சாத்தியப்பாடு நிராகரிப்பதற்கும் இல்லை. இந்நிலையில் நிலையியக்கட்டளையைப் பின்பற்றி ஐந்து நாள் அவகாசம் கொடுத்தால் ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தால் பாராளுமன்றம் புதிய அரசாங்கம் தொடர்பாக தீர்மானம் எடுக்கின்ற உரிமை மீண்டும் முடக்கப்படும். இதை அனுமதிக்க முடியுமா? இந்நிலையில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை, உரிமையை, சுயாதிபத்தியத்தைப் பாதுகாக்க வேண்டியது சபாநாயகரினதும் பாராளுமன்றத்தினதும் கடமையில்லையா? இந்நிலையில் நிலையியல் கட்டளைப்படி ஐந்துநாள் அவகாசம் வழங்கமுடியுமா?

இங்கு சிறுகுழந்தைக்கும் எழுகின்ற கேள்வி உங்களிடம் பெரும்பான்மை இருந்தால் உங்களுக்கு ஐந்து நாள் எதற்கு? அன்றே பெரும்பான்மை நிரூபித்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாமே! பெயர்கூறி வாக்கெடுப்பு

பெயர்கூறி வாக்கெடுப்பு நடாத்தினால் ஏற்றுக்கொள்வேன்; என்கின்றார் ஜனாதிபதி. 14ம் திகதி பெயர்கூறி வாக்கெடுப்பு நடாத்த சபாநாயகர் அழைப்பு விடுக்கவில்லையா? அதைக்குழப்பியது யார்? உங்கள் கட்சிக்காரர்கள் இல்லையா? உங்கள் கட்சிக்காரர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் சபாநாயகரிடம் கேட்கின்றீர்கள்?

உங்களிடம் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்யவேண்டும். அதற்காக பாராளுமன்றத்தை முடக்கப்பார்த்தீர்கள். கலைக்கப்பாத்தீர்கள். உங்கள் கட்சிக்காரர்கள் குழப்ப நீங்கள் சபாநாயகருக்கும் பாராளுமன்றத்திற்கும் எதிராக தீர்ப்பு வழங்கிக்குக்கொண்டிருக்கின்றீர்கள்.

விளைவு நாட்டில் இன்று அரசாங்கம் இல்லை. அமைச்சுகளுக்கு செயலாளர்களில்லை. செயலாளர்களின் அனுமதி இல்லாமல் அமைச்சு நிதிகள் செலவளிக்கப்பட முடியாது. இப்பொழுது அனைத்தும் சட்டவிரோதமாக நடைபெறுகின்றது.

வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உல்லாசப்பயணிகளின் வரவு குறைந்துகொண்டு வருகின்றது. பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி நகர்கிறது.

இதனிடையில் வருட இறுதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த ஆண்டு சம்பளமும் கொடுக்கமுடியாது. எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் கலைந்தால் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதியின் அனுமதியுடன் நிதி செலவழிக்கலாம். இப்பொழுது அது முடியாது. எனவே நாடு மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் 37(1) இல் சொல்லப்பட்ட ‘வேறு ஏதாவது ஒரு காரணம்’ என்ற அந்தப் பதத்திற்குள் இன்றைய சூழ்நிலை அடங்குமா? என்பதுதான் முதலாவது இங்கு தீர்மானிக்கப்படவேண்டிய கேள்வியாகும்.

இதற்குரிய பதில் ‘ ஆம்’ என்றால் அடுத்த கேள்வி, ஜனாதிபதி தன் கடைமையைச் ‘ செய்யாமல் இருக்கின்றாரா? அல்லது செய்யமுடியாமல் இருக்கின்றாரா? ‘ என்பதாகும். தன்கடமையைச் செய்யமுடியாமல் ஏதோ ஒரு காரணம் தடுக்கின்றதா? அந்தக்காரணத்தினால் அவர் செய்யமுடியாமல் இருக்கின்றாரா?

சுருங்கக்கூறின் ‘ செய்யாமல் இருப்பதை, செய்யமுடியாமல் இருக்கின்றார்’ என்று இந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுத்தலாமா? இதற்குமுரிய விடை ‘ஆம்’ என்றால் சபாநாயகர் ஜனாதிபதியின் கடமையைப் பொறுப்பேற்கலாம். இல்லையெனினில் முடியாது.

இது சபாநாயகருடன் கலந்தாலோசித்து பிரதம நீதியரசர் எடுக்கின்ற அபிப்பிராயத்தில் தங்கியிருக்கின்றது.

சபாநாயகர் ஜனாதிபதியின் கடமையைப் பொறுப்பேற்றால் பிரதமரை நியமிக்க முடியுமா ?
—————————————————————
சரத்து 37(3) ஜனாதிபதிக்கு பொருந்துகின்ற சரத்துக்கள் இவ்வாறு ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றவருக்கு பொருந்தக்கூடிய அளவு பொருந்தும். சரத்து 32(2)ஐத் தவிர, என்று கூறுகின்றது. 32(2) என்பதன் சுருக்கம் அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யத்தேவையில்லை, என்பதாகும்.

சரத்து 37(1) மற்றும் (2) இன்படி, பிரதமர் ஜனாதிபதியின் பொறுப்புக்களைப் பாரமெடுக்கும்போது அமைச்சரவருவரைப் பதில் பிரதமராக நியமிக்க வேண்டும். பிரதமர் இல்லாதபோது சபாநாயகர் பாரமெடுக்கவேண்டும்; என்றுதான் கூறப்பட்டிருக்கின்றதே தவிர யாரைப் பிரதமராக நியமிக்கவேண்டும்; எனக்கூறப்படவில்லை.

சபாநாயகர் பாரமெடுப்பதை ஒரு proviso வினூடாகவே கூறப்பட்டிருப்பதால் மேல் கூறப்பட்டதே இங்கும் பொருந்துமா? மாறாக பிரதமர் இல்லையெனில் அமைச்சரவை இல்லை. அமைச்சுச் செயலாளர்கள் இல்லை. எனவே, புதிய பிரதமரை 42(4) இன் பிரகாரம் நியமிக்க முடியுமா? அவ்வாறு நியமிக்க முடிந்தாலும் அவர் பதில் பிரதமரா, முழுமையான பிரதமரா?

44(2) இரண்டு பதில் பிரதமர் நியமிப்பதற்கான சரத்து அல்ல. எனவே, முழுமையான பிரதமரை நியமிக்க முடியுமா?

சரத்து 37 இன் கீழ் அமைச்சர்கள் இல்லாத சூழ்நிலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பதில் பிரதமராக நியமிக்க முடியும்; என்ற வியாக்கினத்திற்கு வரமுடியுமா?

பிரதமர் மட்டும் இருந்து அரசாங்கமாக ஆகிவிடாது. அமைச்சரவை வேண்டும். அமைச்சரவை நியமிப்பதைப்பற்றி சரத்து 37 எதுவும் கூறவில்லை. எனவே, சரத்து 43 ஐப் பிரயோகிக்க முடியுமா? அதாவது சாதாரணமாக அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் சரத்து. சரத்து 43 ஐப் பிரயோகிக்க முடியுமானால் ஏன் சரத்து 44(2) ஐப் பிரயோகித்து அமைச்சர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் முழுமையான பிரதமரை நியமிக்க முடியாது.

37(1)&(2) ஆகியவற்றில் பிரதமர் பதில் ஜனாதிபதியாகும்போது ஒரு அமைச்சரை பதில் பிரதமராக நியமிப்பதற்குக் காரணம் பதில் ஜனாதிபதி பிரதமராகவும் இருக்கின்றார். மறுவார்த்தையில் கூறுவதாயின் பிரதமராக இருப்பதனால்தான் அவர் பதில் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

பதில் ஜனாதிபதியாக வருகின்றவர் தனது பிரதமர் பதவியையோ, சபாநாயகர் பதவியையோ ராஜினாமா செய்யத்தேவையில்லை. பிரதமரின் கடமையைச் செய்வதற்கே பதில் பிரதமர் நியமிக்கப்படுகின்றார்.

சபாநாயகர் பாரமெடுக்கும்போது பிரதமரே இல்லை. எனவே 44(2) இன் கீழ் புதிய பிரதமரை நியமிப்பதற்கு தடையில்லை; என்று ஏன் கொள்ளமுடியாது?

இவ்வாறு பல கேள்விகளுக்கு பதில் காணவேண்டியிருக்கும். இருந்தாலும் சபாநாயகர் பாரமெடுத்துவிட்டால் புதிய பிரதமர், அமைச்சரவை நியமிப்பதில் பிரச்சினை இல்லை, என்பதே பலமான வியாக்கியானமாக இருக்கும். சபாநாயகர் பாரமெடுக்கக்கூடிய 37 இல் குறிப்பிடப்படுகின்ற சூழ்நிலைதான் இன்றைய சூழ்நிலை எனக்கொள்ளலாமா?

என்ன நடக்கப்போகிறது?


(வை எல் எஸ் ஹமீட்)

Share The News

Ceylon Muslim

Post A Comment: