Nov 21, 2018

”ருத்ர தாண்டவமாடும் நிறைவேற்றதிகாரம்” மொண்டஸ்கியுவின் வலுவேறாக்கற் கோட்பாட்டில் எது வலுவானது?


நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இப்போது வீணடிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் ஜனநாயக சோலிசக் குடியரசு அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதியுச்ச அதிகாரத்தை நாடு அன்றிருந்த சூழ்நிலையைக் கருதியே ஜே.ஆர் ஜெயவர்தன அறிமுகப்படுத்தினார். அவசரமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு பாராளுமன்றத்தைக் கூட்டி ஆலோசனை கோரல், வாக்கெடுப்பு நடத்துதலில் காலதாமதம் ஏற்படுதல் என்பவற்றைக் கருத்திற் கொண்டே தனி நபருக்கான இவ்வுச்ச அதிகாரம் அறிமுகமானது.
நாடு எதிர்கொள்ள நேரிடும் ஆபத்தான நிலைகள், சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், ஆயுதக் கிளர்ச்சிகளை அடக்குவதற்குத் தேவையான இராணுவ நடவடிக்கைகள், அவசரகால சட்டங்களுக்காக இந்த நிறைவேற்று அதிகாரம் பாவிக்கப்படுகிறது.

 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எவரிடமும் கேளாமல் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜெயவர்தன நிறைவேற்றினார்.
இந்த ஒப்பந்தத்தின் பின்னர்ரவழைக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் வருகை நாட்டுக்கு ஆபத்தென்பதை உணர்ந்த பிரேமதாசாவும் எவரையும் கேளாமால் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகித்தே இந்திய இராணுவத்தை மீள இந்தியாவுக்கு அனுப்பினார். அதே போல் தெற்கில் சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியை எதேச்சதிகாரத்தால் அடக்கியமையும் இவ்வுச்ச அதிகாரம்தான். மேலும் வடக்கு.கிழக்கில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தில் வகைதொகை இன்றி பலரைக் கைது செய்யவும், வழக்குகள் இல்லாது வருடக் கணக்கில் சிறையிலடைக்கவும், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பதும் ஜனாதிபதியின்  இந்த நிறைவேற்று அதிகாரம்தான்.

வருடக்கணக்கில் வழக்குப்பேசி இலட்சக் கணக்கில் நிதிகளைச் செலவிட்டு தீர்ப்பளிக்கப்படும் குற்றவாளிகளை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் விடுவிப்பதாக இருந்தால் நீதிமன்றங்களில் ஏன் வழக்காட வேண்டும் என்ற விவாதத்துக்கும் இந்த நிறைவேற்று அதிகாரம் பதில் சொல்ல வேண்டும்.

அரசியலில் முஸ்லிம்களுக்குப் பாதகமான 12% வீத வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாகக் குறைத்ததும் நிறைவேற்று அதிகாரம்தான். வடக்கு. கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வாக இடைக்கால நிர்வாக சபை வழங்கியதும் சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரம்தான். பிரிவினை கோரிய புலிகளை இல்லா தொழித்ததும் மஹிந்த ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரம்தான். சிறுபான்மை மக்களின் எதிரியான மஹிந்தவை மீண்டும் பிரதமராக்கி யதும், மைத்திரியின் இந்த நிறைவேற்று அதிகாரம்தான். இத்தனையும் செய்த இந்த அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை பயன்படுத்திய விதமே பலரையும் எரிச்சலூட்டியது. ஜனாதிபதியின் இந் நடவடிக்கையால் சிறுபான்மையினரின் தலையில் பேரிடி விழுந்ததுடன் நிறைவேற்று அதிகாரத்திலும் விரக்தி ஏற்பட்டது. ஒட்டு மொத்தமாக ஆராய்ந்தால் ஜனாதிபதிகளின் மன நிலையில்தான் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் ஆழ,அகல பரிமாணங்கள் தங்கியுள்ளன.
புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த இராணுவ வெற்றியை அடுத்து வெற்றி மமதையில் பயணித்த ராஜபக்ஷ நிர்வாகம், சிறுபான்மைச் சமூகங் களின் அரசியல் அந்தஸ்துக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதால் நிறைவேற்று அதிகாரத்தை நம்பிக்கையுள்ள வேறு ஒரு தலைவரின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய நிர்க்கதி தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டது. இதற்கிணங்கவே தமிழர்கள், முஸ்லிம்கள் இணைந்து 2015 இல் மைத்திரிபாலவுக்கு வாக்களித்தனர்.

நாட்டின் தேசிய ரீதியான நடவடிக்கைகள் ரணிலின் அமைச்சரவையால் சீரழிந்தும் வெளிநாடுகளுக்கு காட்டியும் கொடுக்கப்பட்டதாலே, ரணிலைப் பதவி நீக்கியதாக ஜனாதிபதி சொல்கிறார். ரணிலின் அரசாங்கம் தொடர்ந்தால் தேசிய நலன்களுக்கு ஆபத்து ஏற்படுமென்பதும் ஜனாதிபதிக்குள்ள அச்சம். எனவே தனிப்பட்ட கோபதாபங்களுக்காக, ரணில் பதவி நீக்கப்படவில்லை என்பது ஜனாதிபதியின் வாதமாகும்.
இவ்வளவு தேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும், ரணிலின் போக்குகள் பற்றியும் அவரை உருவக்கிய சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடாதது ஏன்? சபாநாயகர் அல்லது சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு, தான் விடுத்த அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டதாலே மஹிந்தவை மீண்டும் பிரதமராக்கியதாகச் சொல்லப்படும் வாதத்தை ஏற்க முடியாது. ஏன் எனில் மைத்திரிக்கு 2015 இல் அளிக்கப்பட்ட 61 இலட்சம் வாக்குகளில் சுமார் 15 இலட்சம் தமிழ் மொழிச் சமூகங்களின் வாக்குகளாகும்.

 உண்மையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் மனநிலையைப் போன்று சிறுபான்மை சமூகத்தினர் மைத்திருக்கு வாக்களிக்கவில்லை. ரணில் சொன்னதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் வாக்களித்தனரே தவிர, மஹிந்தவுக்கு எதிரான வாக்குகளாக அதனை எடுத்துக் கொள்ள முடியாது.
ஒருவேளை மைத்திரிபால கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருந்தாலும் ஐ.தே.கட்சி வாக்குகள் அவருக்கு கிடைத்திருக்காது. மாறாக மஹிந்த இல்லாது வேறு எவராவது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டிருந்தால் முஸ்லிம்களின் வாக்குகள் வெற்றிலைக்கு அளிக்கப்பட்டிருக்கும். எனவே இவ்விடத்தில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு கட்சி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஸ்ரீ.சு.க நிறுத்திய வேட்பாளரான மகிந்தவே பிரச்சினைக்குரியவராக இருந்தார். இவ்விடத்திலே ஜனாதிபதிக்கு புரிதல் வேண்டி உள்ளது. ரணிலுக்குப் பதிலாக எவரைப் பிரதமராக நியமித்திருந்தாலும் சிறுபான்மை தலைமைகள் எதிர்க்கப் போவதில்லை.

சுமார் 15 இலட்சம் வாக்குகளை வழங்கிய சிறுபான்மையினரின் எதிரியான மஹிந்தவை பிரதமராக்கியதே இக்கட்சிகளுக்குள்ள பிரச்சினை. இதனாலேயே நிறைவேற்று அதிகாரத்தில் சிறுபான்மைத் தலைமைகள் நம்பிக்கை இழந்துள்ளன. 113 ஐப் பெறும் இறுதிப் பிரயத்தனங்களிலும் மைத்திரி தோல்வியடைய இதுவே காரணமாகும். உண்மையில் ரணிலை நீக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வேறு ஒருவரைப் பிரதமராக்கியிருந்தாலும் நிச்சயம் முஸ்லிம் தலைமைகள் ஆதரவளித்திருக்கும். ஏனெனில் ரணில் தலைமையிலான கடந்த மூன்றரை வருட அரசாங்கம் முஸ்லிம் களை கடைக் கண்ணாலே பார்த்து வந்தது என்ற மன நிலை முஸ்லிம்களிடத்தில் இல்லாமலில்லை .கண்டி, திகனக் கலவரங்களில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும், ஜனாதிபதியும் நடந்து கொண்ட விதங்கள், கண்டி ஜனாதிபதிமாளிகையில் முஸ்லிம் அமைச்சர்களுடனும் கண்டி மாவட்ட பௌத்த மத குருமார்களுடனும் நடத்தப்பட்ட பேச்சு வாரத்தையில் கொழும்பிலிருந்து விசேட ஹெலி கொப்டரூடாக கடும்போக்கு பௌத்த மத குருமார் அழைத்து வரப்பட்டமை எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறெல்லாம் முஸ்லிம் அமைச்சர்கள் மனம் திறந்து பேச முடியாத இக்கட்டான நிலையை ஏற்படுத்தவே ஜனாதிபதி இவ்வாறு நடந்து கொண்டாரென்றே அப்போது பேசப்பட்டது.

மேலும் வில்பத்து விவகாரம் தொடர்பில் ரஷ்யாவில் இருந்தவாறே வர்த்தமானியை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடு, வட புலத்து முஸ்லிம்களின் வாழ் வாதாரத்துக்கு வைக்கப்பட்ட இனவாத வேட்டுக்களாகும்.

மேலும் முஸ்லிம் அமைச்சர்கள், சிவில் அமைப்புக்களின் நிர்ப்பந்தத்தினால் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட வில்பத்து தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளமையும் கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தவே. இவற்றுக்கெல்லாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமலிருந்த முன்னாள் பிரதமர் ரணிலின் நடத்தையில் சந்தேகம் கொண்ட வடக்கு முஸ்லிம் தலைமை நிதானத்துடன் சிலதைப்புரிந்து கொண்டது. நிறைவேற்று அதிகாரத்துடன், பாராளுமன்ற அதிகாரம் முரண்பட்டு எதையும் சாதிக்க முடியாதென்பதே அது.

எனவே  பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் ஜனாதிபதி முறையே இன்று சிறுபான்மையிருக்குத் தேவையாக உள்ளது. அப்போதுதான் ஜனாதிதியை பாராளுமன்றத்தால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் 61 இலட்சம் மக்களின் நேரடி வாக்குகளால் தெரிவான, தன்னை பாராளுமன்றம்  கட்டுப்படுத்த முடியாதென்றே மைத்திரி வாதிடுவார். இதே போன்றுதான் இதற்குப்பின்னர் வரவுள்ள ஜனாதிபதிகளும் வாதிடுவர்.
இவ்வாறு கழுத்தறுத்து சமூகங்களின் இருப்பினை இழக்கச் செய்யும் இந்த நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படக்கூடாதென்ற மன நிலையிலுள்ள சிறுபான்மை சமூகம் இனியாவது யதார்த்தம் எதுவென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

-சுஐப் எம் காசிம்


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network