மனித சமூகத்தின் மா பெரும் பொது முதுசம், அனைத்து சமூகங்களினதும் சத்தியப் பேரொளி
இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள், மனித குலத்தை மீட்சிக்குமென, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மீலாத் தினத்தை முன்னிட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அராஜகம், அறியாமை சூழ்ந்திருந்த பண்டைய அரேபிய தீப கற்பத்தில் தீர்க்கதரிசி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பும், போதனைகளும் பெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியிருந்தன. மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்து, மானிடத்தை மதிப்பதில், இஸ்லாம் பெரும் சாதனை நிலைநாட்டியது.
வர்க்க, குல மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவத்தை நிலை நாட்டும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கோட்பாடுகள், உலக அமைதிக்கு வழிகோலும்.
சமய சிந்தனைகளூடாக, சமூகத்தை நேர்வழிப்படுத்திய முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மனித நேயமுள்ள சமூகக் கட்டமைப்பை நிறுவுவதில் வெற்றியீட்டி னார்.
அன்னாரைப் பின்பற்றும் முஸ்லிம்களும், உயர்ந்த சமூக நெறிக்காக உழைப்பதே, இன்றுள்ள தேவையாகவுள்ளது.
சந்தர்ப்பவாதம், சுயநலம், காட்டிக் கொடுப்புக்கள் மலிந்துபோயுள்ள இன்றைய அரசியலில், முஸ்லிம்கள் மிக முன் மாதிரியாக நடந்துகொள்ளல் அவசியம்.
அதிலும் விசேடமாக, முஸ்லிம் அரசியல் தலைமைகள், மிகக் கவனமாக காய்களை நகர்த்துவதே, எமது நாட்டு முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குள்ள ஒரே வழியாகும்.
பிரிவினை வாதம், மத வாதத்தைத் தூக்கிப்பிடித்து, ஏனைய சமூகங்கள் மத்தியில் தனித்துவங்களைத் திணிக்க முனைவது, நாட்டின் இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்தாது என்பதே எனது நிலைப்பாடு.
எனவே, இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளான சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு மற்றும் புரிந்துணர்வுடன், ஏனைய சமூகத்தினருடனும் அந்நியோன்யமாக வாழ முஸ்லிம்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், மீலாத் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: