முள்ளிவாய்க்காலில் மொத்தமாக அழிந்த துயர்போலவே ஆங்காங்கே அடுத்தடுத்து அழிந்த துயர்கள் எமக்குமுண்டு. இவையெல்லாம் மகிந்த காலத்திலும் நடந்ததும் உண்மைதான். அது பகிரங்கமானதும்கூட.

ஆனால் ரணிலின் இரகசிய அரசியல் உளவியலை புரிந்தவர்களுக்குத்தான் அவர் எவ்வளவு ஆபத்தானவரென்று.தெரியும். அதை மிகத்தெளிவாக உணர்ந்து நமக்கும் உணர்த்தியவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் அன்னாருக்கு அழ்ழாஹு தஆலா உயர் சுவனத்தை வழங்கிடுவானாக ... 

டயஸ்போராவுக்கும் ரணிலுக்குமிடையிலான உறவினூடாக தங்களுக்கு ஏதாவது நலவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தமிழ் மக்கள் நம்புவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் ரணில், டயஸ்போரா கூட்டணி முஸ்லீம்களுக்கு அநியாயம் செய்வதில் பேரார்வமும் பேராற்றலும் கொண்டது.

இவர்களுடன் இணைந்து கொண்டிருக்கும் முஸ்லிம், தமிழ் அரசியல் தலைமைகள் இக்கூட்டணியின் அநியாங்களை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ திராணியற்ற சூழ்நிலை கைதிகளாகவே இருக்கின்றனர்.
இயக்குனர்களின் விருப்புக்கு மாற்றமாக எநதவகையிலும் இவர்களால் செயற்பட முடியாது.

இக்கூட்டின் ஒவ்வொரு நகர்வும் ஒரு சகாப்த அடிமைத்துவத்தை எம்மீது திணிக்கவல்லது.
மகிந்தையும் ஆபத்தானவர்தான். 
ஆனால் எவரினதும் கைபொம்மையல்ல.
ரணிலை கட்டுப்படுத்த முடியாது.
அவர் ஏற்கனவே வேறொரு அன்னிய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றார்,

சகவாழ்வையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஒருங்கே வென்ற நாடுகள் அனைத்தும் முதலில் கோப்ரேட் உலகின்  ஆபத்து குறைந்த நட்பை பேணியவைகளே முதலைப்பொருளாதாரத்தின் கோரப்பற்களுக்குள் சிக்கிவிடாமல் தப்பிப்பதே பொருளாதார விற்பன்னம் சர்வதேச இயங்கியல் யதார்த்ததை புரியாத அளவுக்கு விபரமற்றோரை இன்றுகளில் எங்கும் காண முடியாது. ஒரு சமூகத்தை பலி கொடுத்தாயினும் அதிகாரத்தை தக்க வைக்க துணிந்தவர்களின் முதல் தேர்வு முஸ்லீம்களாகத்தான் இருக்கின்றது.

இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் இதுவே நடைமுறை. ஆட்சியை பிடிப்பதற்கு மலிவான உயிர்களாக முஸ்லீம்களையே அடையாளம் கண்டுள்ளனர். இலங்கையை பொறுத்தவரை அரசியல் ரீதியாகவும் மலிவானவர்கள் முஸ்லீம்களே.

எந்த அடிப்படை உரிமைகளையும் அழுத்திக்கேட்காமல் சில கோடிகளுக்காகவும் பதவிகளுக்காகவும்  ஒன்றை ஆதரிக்கவும் மற்றதை எதிர்க்கவும் பழகிவிட்ட ஜனநாயகம் எனும் பெயரிடப்பட்ட கேவலமான கலாச்சாரத்துக்கு அடிமையாகிவிட்ட வியாபாரிகளை பிரதிநிதிகளாய்ப்பெற்ற துர்பாக்கியமான சமூகத்தின் செலவில்லாக் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தால் போதும் என்பதே எநதன் நிலைப்பாடு.

உயிராபத்து இல்லாமல் ரணிலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் நான் சரி காண்கின்றேன்,
அது ஜனநாயத்துக்கு முரணானது என்று கருதப்பட்டாலும் சரியே!

இலங்கையின் இருப்புக்கும் அங்கு வாழும் பல்லின மக்களின் சகவாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவிருக்கும் ரணிலின் அதிகாரத்தை அறவே இல்லாமலாக்கும் நடவடிக்கைகள் எல்லாமே தர்மம் சார்ந்ததே என்பது எனது நிலைப்பாடு.

அரசியலமைப்பின் அடிப்படை இலக்கே நாட்டையும், நாட்டு மக்களையும், நாட்டின் வளங்களையும் பாதுகாப்பதேயன்றி ஜனநாயகம் என்ற பெயரால் பறிகொடுப்பதல்ல இந்த கட்டத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதானது ரணிலை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தும் ஆபத்தை கொண்டிருக்கின்றது

ரணிலின் அதிகாரம் மீண்டும் கிடைத்துவிடும் என நம்பி மகிந்தையை ஆதரிக்காமல் ஜனநாயகத்தின் காவலர்களாக படங்காட்டிக்கொண்டிருக்கும் ஹகீமும் சுமந்திரனும் நிலைமை மோசமாகிக்கொண்டு போவதை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

புதிய அரசியலமைப்பினூடாக கிழக்கை வடக்குடன் இணைத்து அகண்ட சமஷ்டியை பெற்றுத்தருவோம்  என்று தமிழ் மக்களை தாப்புக்காட்டி, துளிர் விடத்தொடங்கியுள்ள மாற்று அரசியல் சிந்தனைகளுக்குள் தப்பித்தவறியும் சேர்ந்துவிடாமலிருக்க ரணிலோடு இருக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு உண்டு

ஆனால் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் முஸ்லீம்களின் எதிரியென முத்திரை குத்தப்பட்ட ரணிலை ஆதரிக்க ஹகீமுக்கோ ரிஷாதுக்கோ என்ன தேவையிருக்கின்றது?

முன்பொரு முறை மகிந்தவுடன் இணைந்து ரணிலின் முதுகில் குத்திய துரோகத்துக்கு வரலாற்று பரிகாரமாய் மகிந்த தனக்களித்த பிரதமர் பதவியையும் வேண்டாம் என்று சொல்ல நேர்ந்ததன் ஆத்திரத்தை பாராளுமன்றத்தில் காட்டி ரணிலிடம் நல்ல பிள்ளையென பெயர்வாங்கும் தேவை கருவுக்கு இருக்கிறது.
அவரின் பாத்திரத்தை அவர் நன்றாகவே நடிக்கிறார்.

ஆனால் நம்மவர்களின் 'ஜனநாக காவலர்கள்' நாடகத்தின் சூட்சுமம் என்ன்வென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு முட்டாள்கள் எவருமில்லை.

இவர்கள் எதை நலவென காட்டுகிறார்களோ அவைகள் அனைத்துமே நஞ்சாகவே இருக்கும் என்ற உச்ச சூத்திரத்தை மக்கள் தெளிவாக தெரிந்திருக்கின்றார்கள்.

நாட்டின் சுதந்திரத்தை மீட்பதற்கு  எவையெல்லாம் ஆகுமானதோ அத்தனையும் ரணிலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும் ஆகுமானதே!

முதலில் அன்னிய சக்திகளிடமிருந்து சுதந்திரம் பெறுவோம்! பணத்துக்கு விற்பனையாகும் வாக்குகளின் சேகரத்தை கூட்டிவரும் எண்கணிதமல்ல ஜனநாயகம்.

தர்கவியல் நியாயங்களின் உதவியோடு சரியையும் பிழையையும் பிரித்தறியும் உயர் பண்பே ஜனநாயகம்

ஜனநாயகத்தின் எதிர்ச்சொல்லால் சர்வதிகாரத்தை கொச்சைப்படுத்துவது  கண்டிக்கத்தக்கது.

'சர்வதிகாரம்' தனக்கென தனியான வியாக்கியானத்தை கொண்டதல்ல

ஒவ்வொரு சர்வதிகாரிகளும் ஒவ்வொரு வியாக்கியானத்தை விதைத்துச் சென்றார்கள்

உத்தமர் உமரும் சர்வதிகாரிதான்.
ஹிட்லரும் சர்வதிகாரிதான்

ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த அதிகாரங்களினால் என்னென்ன செய்தார்கள்,எதற்காக செய்தார்கள் என்பதே அவரவர்களின் சர்வதிகாரத்தின் இலட்சணையும் இலக்கணமுமாகும்.

நிறைவேற்று அதிகாரம் என்ற  சட்டத்தினூடாக இலங்கையில் சர்வதிகார ஆட்சி நீண்டகாலமாக நடந்தேறி வருகிறது

ஜயவர்தனா,பிரேமதாஸா ,விஜேதுங்க,சந்திரிக்கா,மகிந்த போன்றோர் சர்வதிகாரிகளாகவே இருந்தனர்,

என்றாலும் தமது அதிகாரங்களை இவர்கள் ஒவ்வொருவரும் பாவித்த முறைகள் வித்தியாசமானவை

மேற்சொன்ன அனைவருக்குமிருந்த  அதிகாரகாரத்தின் உச்சமான பாராளுமன்றத்தையும் கலைக்கும் அதிகாரம் மைத்திரியின் பதவிக்காலத்தில்  19வது திருத்தத்தினூடாக நான்கரை வருடங்களுக்கு தள்ளிப்போனதால் வந்த சட்ட மீறல்களின் விளைவே இலங்கையில் இப்போது நடந்துகொண்டிருப்பவை

தனது ஆட்சியை 4 1/2 வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது என்ற சட்டத்தின் பாதுகாப்பல்லவா மத்திய வங்கிக்குற்றவாளியையும் பாதுகாக்கும் தைரியத்தை ரணிலுக்கு வழங்கியது?

இலங்கையில் ஸ்திரமான ஆட்சி நடக்கவேண்டுமெனில் ஓர் ஆளுமைமிக்க சர்வதிகாரியினால் நாடு ஆளப்படவேண்டும்.

வெளிநாடுகளின் அஜன்டாக்களுக்கு தலைவணங்கி நாட்டின் இறைமையை விலைபேசாத சிறந்ததோர் ஆளுமையிள் கையில் நாட்டை ஒப்படைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.


-கிழக்கு தேசம் EastLand-

Share The News

Ceylon Muslim

Post A Comment: