கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பினை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் பெற்றுக் கொடுத்ததாக வந்த செய்திகளை அவ் வீட்டுத்திட்டதட்தின் ஆதன முகாமைத்துவக் குழுவினர் மறுத்துள்ளனர்.

மேலும், பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
“கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்றனர். அங்குள்ள குடிநீர் இணைப்புக்கள் கடந்த 15.11.2018 திகதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.


குறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 09 லட்சத்து 21 ஆயிரத்து 036 ரூபாய் செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகினர்.

இதற்கு காரணம் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினர், அங்கு வாழும் மக்கள் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணத்தை கையாடல் செய்துள்ளமையும், திடிரென அக்குழு செயலிழந்தமையும் ஆகும் என பாதிக்கப்பட்ட அம்மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இந்த நிலையில் மேற்குறித்த ஆதன முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதற்காக தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் என ஒரு புதிய அமைப்பினை உருவாக்கி, குறித்த பிரச்சினையை ஆராய்ந்து, முதல் கட்டமாக மீண்டும் மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் செலுத்த புதிய இக்குழு மக்கள் ஆதரவுடன் தற்போது களமிறங்க முடிவு செய்துள்ளது.

இதன் படி அவ்வீட்டு திட்டத்தில் உள்ள 430 குடும்பங்களிடம் தலா 2500 ரூபா வீதம் வசசூலித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் உடனடியாக மீள்செலுத்துவதற்கு, குறித்த தற்காலிக குழு நாளை(22) இரவு 09 மணிக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதன்படி குறித்த பணத்தை அப்பகுதி வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமது காரியாலயத்தில் வந்து ஒப்படைத்து துண்டிக்கப்பட்டுள்ள குடிநீரை மீள பெற முன்வருமாறு அக்குழு கேட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழு இன்றைய ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட குடிநீரை மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன், பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

Share The News

Ceylon Muslim

Post A Comment: