தொடர்ச்சியாக மைத்திரிபால சிரிசேன பாராளுமன்றத்தில் ''குரல்வழி வாக்கு " மூலம் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க பாடசாலைக்குப் போக மறுக்கும் சிறுபிள்ளையைப் போல் அடம்பிடிப்பதனால் பெயர் கூறி வாக்கெடுப்பதற்கு பிரேரிக்கப்பட்ட போது மஹிந்த தரப்பினர் மீண்டும் மறுத்தனர்.

இனியும் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றுவதில் அர்த்தமில்லை.அது எப்படியும் திட்டமிடப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்படத்தான் போகிறது.அதற்கு மாற்றீடாக ஒரு புத்திசாலித்தனமான பிரேரணையை பெரும்பான்மைத் தரப்பினர் இன்று பாராளுமன்றச் செயலாளரிடம் சமர்ப்பித்தனர்.

சபாநாயகரையும்,பெரும்பான்மை உறுப்பினர்களையும் பொறுத்தவரைக்கும் அரசாங்கமோ அல்லது பிரதமரோ இல்லை. அதையும் தாண்டி நான்தான் பிரதமர் என்று சொல்லிக் கொண்டும்,அமைச்சரவை என்று சொல்லிக் கொண்டும் இருப்பவர்களுக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் சக்தி என்ன என்று காட்டுகிறோம் பார் என்று இன்று ஒரு பிரேரணையை சமர்ப்பித்தார்கள் பெரும்பான்மைத் தரப்பைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள்.

அரசியல் யாப்பின் 148ம் சரத்தில் பொது நிதியினைக் கையாளும் பூரண அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் மஹிந்தவின் அலுவலகத்திற்கு எந்தவித நிதியும் செல்லக் கூடாது என்று ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அவர்கள் கேட்பதைப் போல 5 நாட்கள் கொடுத்து எதிர்வரும் 29ம் திகதி விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுக்கப்படும்.அது நிறைவேற்றப்பட்டால் மஹிந்தவின் அலுவலகம் ஒரு சதத்தைக் கூட செலவு செய்ய முடியாது.இதனை ஒரு எச்சரிக்கையாகவே பெரும்பான்மைத் தரப்பினர் செய்து காட்டுகிறார்கள்.இப்படி ஒவ்வொரு அமைச்சுக்கும் எங்களால் செய்ய முடியும் என்ற செய்தியைச் சொல்வததுதான் அவர்களின் நோக்கம். பெரும்பான்மை இல்லாது அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால் பெரும்பான்மை இருப்பவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்லிக்காட்டுவதுதான் இவர்களின் நோக்கம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்று ஆட்சியை பெரும்பான்மையினரின் கைக்குத்தா இல்லாவிடில் உனது பொய் அரசாங்கத்தால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு இனி நடக்கும் என்ற செய்தியை பெரும்பான்மையினர் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

உலக அரசியல் வரலாற்றில் எப்பொழுதும் இல்லாதவாறு பெரும்பான்மை இல்லாதவர்களை அரசாங்கத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருப்பது இலங்கையில்தான்.இதன் விளைவாக முழு நாடும் ஸ்தம்பிதமடையும்.

இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய சமூகமளிக்கவில்லை.அவ்வாறு அளித்திருந்தால் இந்தப் பிரேரணையையும் அவர் ஏற்றுக் கொண்டால் கட்சி சார்பாக நடக்கிறார் என்று சொல்வார்கள் என்பதால் அவர் சமூகமளிக்காமல் இருந்திருக்கலாம்.

பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 மணிக்கு கூடுகிறது.

இந்த இழுபறி நிலை அடுத்த தேர்தல் வரைக்கும் செல்லப்போகிறது.அதற்கிடையில் நாடு சின்னாபின்னமாகப்போகிறது.

மைத்திரி என்ற ஒரு தனிமனிதனின் ஜனாதிபதிக் கனவிற்கும்,மஹிந்தவ என்ற தனிமனிதனின் பதவி ஆசைக்குமிடையில் சிக்கி இந்த நாடு பற்றி எரிகிறது.

(Raazi Muhammadh Jaabir)

Share The News

Ceylon Muslim

Post A Comment: