சகல மதகுருமார்களும் இன ஒற்றுமைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் - கல்முனை விகாராதிபதி

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினுடான சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரர் தனது உரையின் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்கள் மதத் தலைவர் என்ற வகையில் நான் மிகவும் கவலை அடைகிறேன். இவ்வாறான கசப்பான அனுபவங்களை மறந்து நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சந்தர்பமாகவே இச் சந்திப்பை கருதுகிறேன்.

சுமார் 12 வருடங்களாக கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மத குரு என்ற வகையில் அதிகமான ஏனைய மதத்தை சேர்ந்த மதத் தலைவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.

நான் சிங்கள பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த மகத்தான நிகழ்வை நினைவு படுத்துவேன்.

ஒரு நாளும் நான் ஒரு சிங்களவர் என நினைப்பதில்லை நான் இலங்கையர் என்றே நினைக்கிறேன் நாம் எல்லோரும் இலங்கை தாயின் மக்கள் ஒற்றுமையாகவும், சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.

ஒரு சிலர் தங்களது சுய நலத்திற்காக சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என மக்களை பிரித்து இலாபம் பெற முயற்சிக்கிறார்கள் நாம் அவ்வாறு நினைக்க கூடாது நாம் எல்லோரும் இலங்கையர்கள் அனைவரும் சமமானவர்களே என்றே நான் கருதுகிறேன். ஒரு சிலர்களால் மேற்கொள்ளப்படும் தவறான சம்பவங்களை வைத்து ஒரு சமூகத்தை விரோதியாக பார்க்கவும் முடியாது குறை கூறவும் கூடாது .

மதத் தலைவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது இவ்வாறான மோசமான செயற்பாடுகளை செய்பவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் . நாம் எல்லோரும் ஒற்றுமையுடனும் சமாதனத்துடனும் வாழ்ந்தால் உலகத்திலே சிறந்த நாடு நமது இலங்கையாகத்தான் இருக்கும். 

இலங்கையில் உள்ள சகல மக்களும் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதற்கு சகல சகல மத குருமார்களும் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரர் தெளிவான தமிழில் குறிப்பிட்டார்.

இவ் சிநேகபூர்வ சந்திப்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி உட்பட பொலிஸ் அதிகாரிகள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...