ஜனாதிபதி தொடர்பில் சபாநாயகர் அதிருப்தி!

புதிய தரப்பினர் தமது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருக்கப் போவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ள சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இதற்கு முன்னர் இல்லாதவாறு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், தான் அமைதியைக் கடைபிடித்ததாகவும் ஆனால் நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இதுவரை பாதுகாக்கப்பட்ட ஜனநாயகம் அழிவதை தடுப்பதற்காக மனச்சாட்சிக்கு உடன்பட்டு  முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனக்கான தேசிய கடமையாக தான் உணர்வதாகவும் சபாநாயகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 116 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், ஜனாதிபதியின் தீர்மானமானது அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும் இதற்கு அனுமதியளிக்காது நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கான அனுமதியைப் பெறுமாறு தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சாதாரணமானது என தான் உணர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தன்னிடம் வாய்மூலம் தெரிவித்த வாக்குறுதிக்கமைய நடவடிக்கைகைளை முன்னெடுப்பாராயின் எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டை நிலைப்படுத்துவது சபாநாயகர் என்ற ரீதியில் தனது கடமை, என்பதால், ஜனாதிபதி இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அவரது கடமை என்றும் சபாநாயகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...