கருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு? - சூடு பிடித்த பாராளுமன்றம்

மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்பதாக, நளின் பண்டார மற்றும் சுமந்திரன் எம்.பி.கள் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான ஒழுங்குப் பத்திரங்களை முன்வைத்து, பாட்டலி, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த நளின் பண்டார எம்.பி.

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது பாரதூரமான ஒன்றாகும். அண்மையில் கருணா அம்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், 'சில ஐக்கிய தேசியக் கட்சியினர் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். நான் மட்டக்களப்பு கருணா அம்மான் . 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய கருணா அம்மான் என்றால் யார் என மற்றவர்களிடம் கேளுங்கள்..." என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பின்னரே நேற்றிரவு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் கருணா அம்மானுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.இது பாரதூரமான விடயமாகும். உடனயாக ஜனாதிபதி தலையிட்டு இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். புலி புலி என இனவாதத்தை தூண்டும் மஹிந்த அணியினரான விமல் வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் தற்போது வாயை மூடிக்கொண்டிருக்கின்றனர்.இவர்களை போன்று நாம் இனவாதத்தை தூண்டுபவர்கள் அல்ல. மாறாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுதொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  இதன் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் இருக்கின்றாரா என விசாரணை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துங்கள்” என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

"இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்துகிறேன் மேலும் பாதுகாப்பு செயலாளருக்கும் விசாரணை செய்து விளக்கமளிக்குமாறு தெரியப்படுத்துகிறேன்" என சபாநாயகர் சபையில் தெரிவித்தார். 
JVPnews

தொடர்புடைய செய்தி

கருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு? - சூடு பிடித்த பாராளுமன்றம் கருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு? - சூடு பிடித்த பாராளுமன்றம் Reviewed by NEWS on November 30, 2018 Rating: 5