Dec 3, 2018

”100 ரணிலுக்கு: 103 மகிந்தவுக்கு” தீர்மானம் ஜனாதிபதியே எடுக்க வேண்டும்- ஹிஸ்புல்லாஹ்

உறுதியான அரசாங்கமொன்றினை அமைக்கப் பிரதான இரு கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரைப் பிரதமராக நியமிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்ப இந்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

‘இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது அரசியலில் பெரும் பிரச்சினைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இந்தத் தீர்மானம் வேறு எந்தவொரு தனிப்பட்ட சொந்தப் பிரச்சினைகளுக்காக எட்டப்பட்டவை அல்ல. முற்றிழுதாக, நாட்டின் நன்மை கருதியே இந்தத் தீர்மானம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை நாட்டையும், மக்களையும், தேசிய சொத்துக்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வளம் பொருந்தியதொரு நாட்டைக் கையளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.குறிப்பாக, இன்று அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியிலுள்ள எமது அரசாங்கத்துக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளன.

உண்மையில் இவ்வாண்டு இறுதியை நோக்கி நகரும் இந்த வேளையில் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், குறைநிறப்பு திட்டங்களுக்காகவும் பாராளுமன்றத்தை அனுக வேண்டிய தேவை எமக்குள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் எந்தவிதமான பணத்தையும் யாருக்காகவும் அரசாங்கம் செலவு செய்ய முடியாது. ஆனால், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எமக்குச் செலவு செய்யும் அதிகாரம் இருக்கின்றது.பாராளுமன்றத்தில் பிரேரணைகளை சமர்ப்பித்து எமது நிர்வாகங்களை முடக்கலாம் என்ற எதிர்கட்சிகள் நினைக்கின்றன. அது சட்டரீதியான ஒரு செயல் அல்ல. இந்த அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் பாராளுமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.

அவ்வாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கு விரோதமான எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. அதற்கு அவர் ஒருபோதும் ஆயத்தமாக இருக்கவே இல்லை. இந்த நாட்டைச் சிறந்ததொரு பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் தேவையாக இருந்தது. இதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரெனும் ஒருவரைப் பிரதமராக நியமித்துக் கடந்த 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமுல்படுத்தினால் அதற்கான ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்குவதாக தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரேனும் ஒருவரைப் பிரதமராக நியமிப்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வேளையில் ரணில் விக்கிரசிங்கவை பிரதமராக்குவதற்காக 113 ஆசனங்களை அவர் பெற்றிருக்கவில்லை. எதிர்க்கட்சியிலிருந்து ஒரு சிலரே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு விரும்புகின்றனரே தவிர எழுத்து மூலமாக இதுவரையில் அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. 100 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்குவுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அதேவேளை, 103 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.

ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவை விட 113 ஆசனங்களை ஒருவர் பெருவராக இருந்தால் அவரைப் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளார். அத்துடன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வாபஸ் பெறலாமா என்றும் அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதா என்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் ஒரு நல்லதொரு தீர்மானத்தை எட்டவுள்ளோம்.

யாரைப் பிரதமராக நியமிப்பது என்று கூறமுடியாது அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்கவேண்டும். வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தைக் கொண்டு இந்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்.’ என அவர் மேலும் தெரிவித்தார். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network