Dec 3, 2018

”அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓட்டைக்கு துணை போனோல் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்” – பானந்துறையில் ரிஷாட்


நிறைவேற்று அதிகாரத்துக்கு கடிவாளம் இடப்படாத காலத்திலிருந்த ஜனாதிபதிகளான ஜெயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, டி பி விஜயதுங்க ஆகியோர் அரசியலமைப்புக்கு இயைந்து செயற்பட்ட நிலையில் 19வது திருத்தத்தின் மூலம் சிறகுகள் கத்தரிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை கையிலெடுத்துக் கொண்டு தனது சுய விருப்புக்கேற்ப செயற்பட்டு, மீயுயர் சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாரூக் பஸ்மில்கான் எழுதிய க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான அரசறிவியல் ஓர் அறிமுகம்என்ற நூல் வெளியீட்டு விழா பாணந்துறை சரிகமுல்லையில் நேற்று (02) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பில் பிரதமர் ஒருவரை நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனினும் 19வது திருத்தத்தின் பின்னர் பிரதமரை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. ஆனால் ஜனாதிபதி தனக்கில்லாத, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்படாத ஓர் அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமரை நீக்கியுள்ளார். அதன் மூலம் பிழையொன்றைச் செய்துள்ளார். அரசிலமைப்புக்கு மாற்றமான முறையில் பிரதமரை, ஜனாதிபதி நீக்கியதற்கு நாமும் ஆதரவு தெரிவித்தால், நாட்டின் உயரிய சட்டத்தையும் மீறி எதிர் வரும் காலங்களில் சிறுபான்மை சமூகத்துக்கு ஜனாதிபதி எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்த்து நிற்கின்றோம். அரசியலமைப்பில் விழுந்துள்ள இந்த ஓட்டையை பெரிதாக்குவதற்கு விடக்கூடாது என்பதற்காகவும் அத்துடன் அது ஒரு நிரந்தரமான ஓட்டையாகி விடக்கூடாது என்பதற்காகவுமே ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.

அரசியலமைப்புக்கு முரணான ஓர் விடயத்தை நிறைவேற்று அதிகாரம் இருப்பதற்காக ஜனாதிபதி கையிலெடுத்துச் செயற்படுத்தும் போது அதனை கை கட்டி பார்த்துக் கொண்டிருப்பது பாரிய துரோகமாகும்.  அதுமாத்திரமின்றி இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகத்திற்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பாதுகாப்பை வழங்கும் இந்த அரசியலமைப்பை மலினப்படுத்தி விட நாம் அனுமதிக்க முடியாது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த அரசில் தனது பூரண நிறைவேற்றதிகாரத்தின் மூலம் இனவாதிகளை பாதுகாத்த ஒரே காரணத்துக்காகவே, முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்தோம். அவரைப்பற்றியோ அவரது குணாம்சங்கள் பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் சிறுபான்மை சமூகத்தை நிம்மதியாக வாழ வைப்பார் - இனங்களுக்கிடையே நல்லுறவை கட்டியெழுப்புவார் - அச்சமில்லாத சூழலை பெற்றுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது வெற்றிக்காக முழுமையாக உழைத்தோம்.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் இணைந்து ஒற்றுமையுடன் வாக்குகளை அள்ளிக் கொட்டி அவரை ஆட்சிக் கதிரைக்கு கொண்டு வந்தது. எனினும் அந்த நன்றிகளைக் கூட மறந்து முழு மூச்சாக உழைத்த சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளுக்குத் தானும்  தெரியாமல் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

மகிந்தவின் பதவிப் பிரமாணம் முடிந்த பின்னர் வெளியே வந்த மகிந்தவின் கட்சி முக்கியஸ்தர்கள் தமக்குப் பெரும்பான்மை இல்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் வருகைக்குப் பின்னர் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி எங்களை மலினமாக எண்ணினார்கள். வித்தியாசமான தோரணையில் கதையளந்தார்கள். பணத்திற்கும் பதவிக்கும் வாயைப் பிளந்து ஓடி வந்து விடுவார்கள் என எங்களை தப்புக் கணக்குப் போட்டார்கள். எனினும் இவற்றுக்கெல்லாம் சோரம் போனால் நாட்டிற்கும் எதிர்கால சமுதாயத்திற்கும் செய்கின்ற பாரிய துரோகம் என்பதை உணர்ந்தோம்.

 பாதுகாப்பு நீக்கப்பட்டு, கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்  இறைவனின் பாதுகாப்புடனும் அவன் தந்த மன தைரியத்துடனும் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி வருகின்றோம் என்று தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் அகதி முகாமில் வாழ்ந்து, தற்போது பாணந்துறையில் ஆசிரியர் பணி புரியும் இந்த நூலாசிரியர், மாணவர்களின் கல்விக்காக எழுதியுள்ள இந்த நூலானது இக்கால கட்டத்தில் மிகவும் காத்திரமானது. நூலாசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலே எழுதியுள்ள இந்த நூலைப் போன்று இன்னும் பல நூல்களை எழுத வேண்டுமென வாழ்த்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

களுத்துறை அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் புர்கான் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் கௌரவ அதிதிகளாக முசலிப் பிரதேச சபை பிரதித் தவிசாளர் முகுசீன் ரயிசுதீன், யஹியான் பௌண்டேசன் பணிப்பாளர் ரஸீன் மாஸ்டர் உட்பட பிரபல அறிவிப்பாளர் ஏ ஆர் எம் ஜிப்ரி, சமூக ஜோதி ரபீக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

--    ஊடகப்பிரிவுSHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network