நிதி மங்களவுக்கு? ரவிக்கு ஆப்பு? கட்சிக்குள் குழப்பம் தொடர்கிறது

புதிய அமைச்சரவை நியமனம் தாமதமடைந்து வரும் நிலையில் நிதி அமைச்சர் பதவி தொடர்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை அடுத்து, நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரவி கருணாநாயக்க மீண்டும் அந்தப் பதவியைப் பிடிக்க போட்டி போடுகிறார்.

அதேவேளை, ஏற்கனவே நிதியமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவும், அந்தப் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதனால் ஐதேகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை, இவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபரும் இணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இழுபறிகளால், புதிய அமைச்சர்கள் நியமனம், நாளையோ அல்லது வாரஇறுதியிலோ தான் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வாரம் இடைக்கால கணக்கு அறிக்கை

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதும், இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்று அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று, ஐதேக உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

“அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படாததால், அரசாங்கம் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அடுத்த 12 நாட்களுக்குள் இடைக்கால கணக்கு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இந்த வாரம், அமைச்சரவை நியமிக்கப்பட்டதும், அடுத்தவாரம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசின் இரண்டு மாத செலவினங்களுக்கான, இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

பெப்ரவரி மாதம் புதிய வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...