சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் இரு வெவ்வேறு சந்திப்புகளிலும், குழப்பமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

நேற்றுப் பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், தற்போது, பிரதமரோ, அமைச்சரவையோ இல்லை என்றும், அடுத்த 24 மணி நேரத்துக்குள், தான் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறி்வித்துள்ளது. எனினும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நேற்று இரவு நடத்திய பேச்சுக்களின் போது, அதற்கு மாறான கருத்தை சிறிலங்கா அதிபர் வெளிப்படுத்தியுள்ளார்.

“மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ஒப்புக்கொள்ள சிறிலங்கா அதிபர் தயாராக இல்லை. அந்த உத்தரவு தனக்கு இன்னமும் அதிகாரபூர்வமாக வழங்கப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார். அந்த உத்தரவு கிடைத்த பின்னரே, அதுபற்றிப் பரிசீலிப்பேன் என்று அவர் கூறினார்” என, பேச்சுக்களில் பங்கேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: