அனைத்து அமைச்சர்களின் கொடுப்பனவுகளும் இடைநிறுத்தம்

அமைச்சரவையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைய, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகள், எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் சம்பளமும் நிறுத்தப்படவுள்ளன.

இதேவேளை, அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதால், சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அந்தந்த அமைச்சுகளின் கீழ் புதிதாக ஆரம்பிக்கப்படவிருந்த திட்டங்களும் தாமதமடைந்துள்ளதாக எஸ் அமரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவைகளின் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் பிரதமர் செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

இதேவேளை அனைத்து அமைச்சுக்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...