வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு 10 மில்லியன் !


'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா'

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு'என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபாவரை வீட்டுக் கடன் வழங்கவும், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 2 மில்லியன் ரூபாவரை கடன் வழங்கவும் நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டு மக்களைப் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 'என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா இலகு கடன் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இத்திட்டம் விஸ்தரிக்கப் பட்டு தற்பொழுது வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தமக்கான வீடுகளைக் கட்டிக் கொள்ள 2 வருட சலுகைக் காலத்துடன், 15 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையிலும் 10 மில்லியன் ரூபாவரை கடன்வழங்கப் படவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக பதிவுசெய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கேஉள்ளூர் வங்கிகளின் ஊடாக இக்கடன்கள் வழங்கப்பட உள்ளதுடன், இந்தக் கடன்தொகையில் 75 வீத வட்டியை அரசாங்கம் திறைசேரியின் ஊடாக செலுத்தும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம், முச்சக்கரவண்டி சாரதிகள் தமது முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாகபாதுகாப்பான சிறிய கார்களை, டெக்ஸி சேவைக்காகக் கொள்வனவு செய்ய 2 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்படும். இந்தக் கடனுக்கான 75 வீத வட்டியையும் அரசாங்கம் திறைசேரியின் ஊடாக செலுத்தும்.
முச்சக்கரவண்டி உரிமையாளர்களாக உள்ள, 35 வயதைப் பூர்த்திசெய்தவர்கள் இந்தக் கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களுக்கு கடந்தவாரம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிமுகப் படுத்தப்பட்ட 'என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை அரச வங்கிகளின் ஊடாக 65 பில்லியன் ரூபாவும், தனியார் வங்கிகள் ஊடாக 36 பில்லியன் ரூபாவும் 34,500 பேருக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

சுயதொழில் முயற்சியாளர்கள், விசாயிகள் ஊடகவியலாளர்கள் எனப் பல்துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கடன் திட்டத்தால் நன்மையடைந்துள்ளனர்.

அதேநேரம், தனியார் துறை முதலீடுகளுடன் முதியோர் பாதுகாப்பு நிலையங்களை அமைக்க 10 மில்லியன் ரூபாவை கடன்களாக வழங்கவும், இவற்றுக்காக 75 வீத வட்டியை அரசாங்கம் திறைசேரியின் ஊடாக ஏற்றுக்கொள்ளவும் அமைச்சர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

'என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டிலும் கடன்களை வழங்கவும், இவற்றுக்கான வட்டியை வங்கிகளுக்கு மீளச் செலுத்தவும் 700 மில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு 10 மில்லியன் ! வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு 10  மில்லியன் ! Reviewed by Ceylon Muslim on January 28, 2019 Rating: 5