விகாரைக்கு குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் : 50பேரின் விபரம் கிடைத்துள்ளது

பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழுவொன்றுடன் சம்பந்தப்பட்ட 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அடிப்படைவாத குழு தொடர்பான தகவல்கள் புத்தளம், வனாதவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த அடிப்படைவாதக் குழுவுடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதற்கு இந்த அடிப்படைவாதக் குழு நாடு முழுவதும் வகுப்புக்களை நடாத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

வனாதவில்லு வெடிபொருட்களை மறைத்து வைத்ததும் இந்த அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த முக்கிய இருவர் மூலம் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. வனாதவில்லு பிரதேசத்தில் இருந்த வெடிபொருட்களுடன் நான்கு பேரைக் கைது செய்வதற்கும் காரணமாக அமைந்தது ஏற்கனவே, கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கிடைத்த எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் எனவும் கூறப்படுகின்றது.

இந்த அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர், பல வாரங்களாக தனது தென்னந்தோட்டத்தில் தங்கி, குண்டு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் காணப்பட்டதாக கைது செய்யப்பட்ட வனாதவில்லு தென்னந்தோட்ட உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

வனாத்தவில்லு தென்னந்தோட்ட வெடிபொருட்களுடன் தொடர்புபட்ட இருவர், மாவனல்லை உட்பட பல பிரதேசங்களில் புத்தர் சிலையை உடைப்பதற்கு தூண்டுதல் வழங்கியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அடிப்படைவாத குழுவுடன் தொடர்புடைய இருவர் தற்பொழுது புத்தளம் பிரதேசத்தை விட்டும் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...