பாராளுமன்றில் அமைதியின்மை: அசம்பாவிதங்களுடன் 59 எம்.பி.க்கள் தொடர்பு !

கடந்த வருட இறுதியில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மையினைத் தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் இவர்களில் 54 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அச்சம்பவங்களை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களை விசாரணை செய்வதற்கு சபாநாயகரினால் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குழுவொன்றினை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்குழுவே தனது இறுதி அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

அசம்பாவித சம்பவங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு எதிராக 12 முறைப்பாடுகள் சுமத்தப்பட்டுள்ளன. அடுத்து குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் எதிராக அதிகப்படியான முறைப்பாடுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சபாநாயகரின் மைக்ரோபோனை உடைத்து சேதப்படுத்தியமை, சபாநாயகரை தண்ணீரால் தாக்கியமை, குப்பை வாளியினால் தாக்கியமை, சபாநாயகரின் ஆசனத்தில் தண்ணீர் ஊற்றியமை, கத்தி போன்ற ஒன்றினை கையில் வைத்திருந்தமை, சபாநாயகரின் கதிரையில் அமர்ந்திருந்தமை, பொலிஸ் அதிகாரிகள் மீது கதிரை மற்றும் புத்தகங்கள் வீசியமை, பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை, அவர்கள் மீது திரவம் வீசியமை, பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளி அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, செங்கோல் வைக்கப்பட்டிருந்த மேசையை தள்ளிவிட்டமை எனும் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் காரணமாக பாராளுமன்ற உடைமைகளுக்கு 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையின் போது குறிப்பிட்ட அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த அசம்பாவித சம்பவங்களை விசாரணை நடாத்த பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிரி தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுவில் ரஞ்சித் மத்தும பண்டார, சமல் ராஜபக் ஷ, சந்திரசிரி கஜதீர, பிமல் ரத்நாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்ற குழுவின் அறிக்கை கடந்த 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. சபாநாயகர் அறிக்கையை விரைவில் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...