ஒலுவில் துறைமுக பிரச்சினை : எவருக்கும் பாதிப்பு இல்லாதவாறு தீர்க்கப்படும் : ACMC அப்துல்லா மஹ்ரூப்

(எம்.ஏ.றமீஸ்)

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விடயங்களை எத்திவைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் நேற்று(20) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

ஒலுவில் துறைமுகத்திலிருந்து தமது கடற்றொழிலினை மேற்கொண்டு வரும் இப்பிராந்திய மக்களில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் துறைமுகத்தில் நிரம்பி வரும் மணலின் காரணமாக தமது தொழிலினை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதேவேளை ஒலுவில் பிரதேசத்தினை அண்டியுள்ள ஒலுவில் பாலமுனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினையும் மிக விரைவில் தடுத்து நிறுத்தி அம்மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் அழிவுகளுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

தமது ஜீவனோபாயமாக இருந்த இக்கடற்றொழில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இம்மீனவர்கள் வாழ வழியின்றி பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். எத்தனையோ மீனவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடன்காரர்களாக மாறிவிட்டனர். தமது மூல வளங்களைக் கொண்டு தொழில் புரிவதற்கு தேவையான வாய்ப்பு வசதியற்று சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதை நாம் நன்கறிவோம்.

மிகவும் வருமானம் குறைந்த மீனவர்களின் வாழ்வில் தொடர்ந்தும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வண்ணம் அவர்கள் எதிர்கொள்வுள்ள பசி, பட்டினி போன்ற நிலைமைகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். 

எதிர்வரும் வாரம் இப்பிராந்தியத்தில் உள்ள மீனவர்கள் சிலரையும் கடலரிப்பிற்குள்ளாகி வரும் மக்களில் சிலரையும் தலைநகருக்கு அழைத்து அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை மீன்பிடித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர், துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் போன்றோரை ஒரு மேசையில் ஒன்றிணைத்து மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கடலரிப்பிற்கு உள்ளாகும் மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளேன்.

கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களை தற்போது நாம் அழைத்து வந்து இப்பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் அழிவுகளை காண்பித்திருக்கின்றோம். அவர்கள் மூலமாக இப்பிராந்திய மக்களின் வாழ்வில் பிரச்சினைகள் அற்ற சுபீட்சத்தினை ஏற்படுத்துவதற்கு நாம் முயன்றுள்ளோம்.

ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் உள்ள மீனவர்கள் போல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிண்ணியா, முதூர், சம்பூர், இறால்குழி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது பிரச்சினைகளையும் மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இதன்போது துறைமுக அதிகார சபையின் உயரதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்; பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மீன்பிடித் துறைமுகத்தில் நிரம்பி வரும் மணல் ஒன்றுசேரும் இடமத்தினை பார்வையிட்டதுடன், அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...