கிரானில் ஊற்றெடுக்கின்ற இனவாதம் ஏறாவூரில் நாற்றமெடுக்கின்றது.#1 - கிரான் கிராமத்திற்குள் சென்ற முஸ்லிம் வயோதிபர் ஒருவரை, அவரது கீழாடையையும் உள்ளாடையையும் களைந்து சில தமிழர்கள் தாக்கியிருக்கின்றார்கள். "இங்கு (தமிழ் கிராமத்திற்குள்) நீ ஏன் வந்தாய்?" என்று கேட்டு அவரை அவர்கள் தாக்குவதை ஒளிப்பதிவு செய்து தங்கள் முகநூலில் பதிந்துள்ளார்கள். பார்ப்பதற்கு மிகவும் கோரமான இந்தக் காட்சி ஏறாவூர் முஸ்லிம் இளைஞர்களை மிகவும் கடுமையாக ஆத்திரமூட்டியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதற்கு முன்பும் கிரானைச் சேர்ந்த சிலர் அங்கு "முஸ்லிம்கள் எவரும் வியாபாரம் செய்ய வரக்கூடாது" என்ற தடுத்ததையும்; அதன் விளைவாக, ஏறாவூருக்குள் தமிழர் எவரும் தொழிலுக்காக நுழையக்கூடாது என்று சிலர் எதிர்வினை காட்டியதையும்; இருபக்கத் தலைமைகளின் தலையீட்டால் ஏற்படவிருந்த அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டதையும் உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.

#2 - மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் 1985ஆம் ஆண்டை என் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன:

அப்போது நான் பள்ளிக்கூட மாணவன். எல்லைப்பகுதியில் உள்ள பெரிய பாழுங்கிணறொன்றில் தலை கொய்யப்பட்ட ஒரு உருவம் ஊதிப்பெருத்து, குப்புறக்கிடப்பதை நான் கண்டேன். அது நிச்சயமாக ஒரு தமிழர்தான் என்பதை நிச்சயமாக உணர்ந்தேன். (அதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் பதுளை வீதியிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்குள் வசித்த முஸ்லிம்கள் கொல்லப்பட்ட, அவர்களுடைய பாலியல் உறுப்புக்கள் அறுக்கப்பட்டு அவர்களின் வாய்களுக்குள் திணிக்கப்பட்டிருந்த நிழற்படங்கள் வெளியாகி இருந்தன.)

அச்சமயம், அருகிலிருந்த ஒரு ஆசிரியரை அழைத்தேன். நான் அவரிடம் எதுவுமே சொல்லாமல், அவரைக் கிணற்றிற்குள் எட்டிப்பார்க்கும்படி கூறினேன். எட்டிப்பார்த்த அவர் மயங்கி விழப்பார்த்தார்; அவரே ஒரு கொலைமுயற்சிக்கு ஆட்பட்டவர்போல் ஆடிப்போனார்; என் மீது மிகவும் ஆத்திரப்பட்டார்.

அவர் சற்று சுதாகரித்தபின் நான் அவரிடம் கேட்டேன்: "இந்தக்கொலைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?"

"இதில் நீதி நியாயம் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இவ்வாறான கொலைகள் எம்மவர் அவர்களால் இனிமேலாவது கொல்லப்படாமலிருக்க வழி சமைக்கும்; எம் மீதான அவர்களின் வன்முறைகளுக்கான, எங்களின் எதிர்வினையின் வலியை அவர்கள் உணர்கின்றபோது, நிச்சயம் அவர்கள் தங்களின் வன்முறைகளை நிறுத்துவார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்," என்றார்.

கவனிக்க: வன்முறைச் சூழல் உருவாகுகின்றபோது, நன்கு படித்தவர்கள், சுபாவத்திலே மென்மையானவர்கள் கூட வன்முறையை ஒரு தீர்வாக நோக்குவார்கள். வன்முறைச் சூழலை முளையிலேயே கிள்ளாவிட்டால், பின்னர் இல்லாமலாக்குவது மிகவும் கடினமானது. தீவைப்பது இலகுவானது; அணைப்பது கடினமானது.

# 3 - வன்முறைகள் வெடிக்கின்றபோது கொல்லப்படுபவர்கள் வன்முறைகளில் நேரடியாக ஈடுபடுபவர்கள் அல்லர்: ஏறாவூரிலிருந்து கிராணிற்கு வியாபரத்திற்காகச் சென்ற முஸ்லிம் அப்பாவிகளும், கிரானிலிருந்து ஏறாவூரிற்குள் தொழில்தேடி வந்த தமிழ் அப்பாவிகளும்தான் என்பதைக் கவனிக்க.

# 4 - நேற்று கிரானில் நடந்த அயோக்கியத்தனம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. கேன்சர் முத்தியபின் எல்லோராலும்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும். அதற்கு ஒரு விஷேட வைத்தியர் தேவை இல்லை. முத்தியபின் கண்டுபிடிக்கப்படுகின்ற கேன்சரை யாராலும் குணப்படுத்த முடியாது.

முளையிலேயே கண்டுபிடிக்கப்படுகின்ற கேன்சரைத்தான் குணப்படுத்தலாம். ஆனால், இதை எல்லோராலும் கண்டுபிடிக்கமுடியாது. அதற்கு ஒரு விஷேட வைத்தியர் தேவை.

நேற்று கிரானில் நடந்த அயோக்கியத்தனம் ஒரு முத்திய கேன்சர்; இது மிக நீண்ட காலத்திற்கு முன்பு ஆரம்பித்த ஒன்று.

இலங்கையிலேயே மிகச் சிறியதும், மிகக்குறைந்த அதிகாரத்தைக் கொண்டதுமான ஏறாவூர் நகர டீ. எஸ் பிரிவுக்குள் கழிவுகள் கொட்ட இடமில்லை. (மூச்சுவிடவே இடமில்லாத ஒரு "மினி ஹாங்காங்" இத ஊர்.)

எனவே குப்பைகளை தூரவிடத்தில் உள்ள காடுகளுக்குள் கொட்டுவதற்கு முயற்சி செய்தது ஏறாவூர் நகர டீ. எஸ் பிரிவு. இந்தக் கழிவுப் பிரச்சினையை ஒரு மனிதப் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு இனத்தின் பிரச்சினையாகப் பார்த்த தமிழ் அதிகாரிகள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். விளைவாக, ஏறாவூர் நகரசபை, ஊரில் உள்ள அத்தனை கழிவுகளையும் ஏறாவூர் சிறுவர் பூங்காவிற்கு அருகிலே கொட்டி எரித்துக்கொண்டிருக்கின்றது. அங்கிருந்து வரும் துர்நாற்றத்திற்குள் இனவாதக் கேன்சரின் முளை இருந்தது. யாரும் இதை அவதானிக்கவில்லை; அதை முளையிலேயே கிள்ளவில்லை.

# 5 - அரசியல்வாதிகளிடம் எங்களைப் பாதுகாக்கின்ற, இன ஒற்றுமையைப் பேணுகின்ற பொறுப்பை விட்டுவிடுகின்ற சமூகம் தோற்றுப் போகும். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் மாத்திரம் குறியாய் இருப்பவர்கள்.

மார்க்கத் தலைமைகளிடம் இந்தப் பொறுப்பை விட்டுவிடுகின்ற சமூகமும் தோற்றுப் போகும். அவர்கள் வானத்திற்கு மேலே வசிப்பவர்கள். சமூக அரசியல் பிரச்சினைகள் பற்றிய அறிவு இவர்களிடம் அறவேயில்லை. அது கொஞ்சமாவது இருக்கின்ற நட்சத்திர உலமாக்களோ கொழுத்த பழுத்தநிறக் கடிதவுறையில் கவனமாயிருப்பவர்கள். இந்த இருவர்க்கத்தாருக்கும் சமூக நலனில் உண்மை அக்கறை கிடையாது.

# 6 - தமிழ் முஸ்லிம் உறவு வலுவடைய வேண்டும். இது துணிந்து சிந்திக்கின்ற, செயலாற்றுகின்ற இலைஞர்களால் மாத்திரம்தான் சாத்தியமாகும். அவர்கள் அநீதி எங்கிருந்தாலும் அதைக் கண்டிக்கவேண்டும். தன் இனம் பாதிக்கப்படும்போது மாத்திரம் எழுப்பப்படுவது நீதிக்கான குரல் அல்ல.

பைசால்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்