பாராளுமன்றில் பிரதமர் விடுத்த விசேட அறிவிப்பு !

நாட்டில் 51 நாள் நீடித்த அரசியல் நெருக்கடி நிலையினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து நாட்டை உயர்த்துவது இலகுவான காரியமல்ல. ஆனால் ஜனநாயகத்திற்கும் மக்களின் இறைமைக்கும் ஏற்பட்ட சவாலுக்கு முகங்கொடுத்து மீண்டும் பொருளாதாரத்தையும் மக்களின் இறைமையையும் தூக்கிநிறுத்தியது போன்று பொருளாதாரத்தையும் உயர்த்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் மக்கள் நல வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் கடந்த 51 நாட்களில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு ஒரு பில்லியன் டொலர்களினால் குறைவடைந்ததாகவும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் ​மேலும் குறிப்பிட்டதாவது, 

அரசியல், சமூக பொருளாதார சவால்கள் எம்முன்பாக இருக்கின்றன. 

2015 இல் நாம் நாட்டை பொறுப்பேற்கையில் முழு நாடும் பாரிய கடன் பொறியில் சிக்கியிருந்தது. கடன் சுமையில் இருந்து தந்திரோபாயமாக மீள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிலையான இடத்திற்கு உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுத்தோம். 

இந்த வருடத்தில் பொருளாதார துறையில் பாரிய சவால் காத்திருக்கிறது. 

அதிக கடன் தொகையை இந்த வருடம் செலுத்த வேண்டியுள்ளது. 2019 இல் வெளிநாட்டு கடன் மற்றும் வட்டியென 5,900 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத் வேண்டும். இலங்கை வரலாற்றில் பாரிய கடன் தவணையாக ஜனவரி 14 இல் 2,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியில் பெறப்பட்ட கடனை, பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மீளச் செலுத்துவதற்கான திட்டமொன்றை தயாரித்திருந்தோம். 

உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துதல், ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்துதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்தல் போன்ற திட்டங்களை நாம் செயற்படுத்தியிருந்தோம். 

கடந்த வருடத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ரூபாவின் பெறுமதியை பேணுவதற்காக நாம் மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தோம். 

ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக சகல நடவடிக்கைகளும் தடைப்பட்டன. 51 நாட்கள் நீடித்த அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையினால் ஸ்தீரமாக இருந்த எமது பொருளாதாரத்தின் மீது பெரும் இடி விழுந்தது. பொருளாதார வளர்ச்சி வீதம் தடைப்பட்டது. ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்தது. இக்காலப்பகுதியில் எந்த நாட்டிடமிருந்தோ சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடனோ உதவியோ பெற இலங்கைக்கு முடியவில்லை. 

இக்காலப்பகுதியின் அரசின் அபிவிருத்தி திட்டங்கள், கருத்திட்டங்கள் தடைப்பட்டன. இந்த காலப்பகுதியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஒரேயடியாக காண முடியாது. இதனால் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். 

51 நாட்களில் இழந்த பொருளாதார அபிவிருத்தியை மீள கட்டியொழுப்புவதற்கு கால அவகாசம் தேவைப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிட்டது. அவர்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் அரசியல் ஸ்தீர நிலைமை காணப்படுவதாக சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் குறிப்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டும். 
சுற்றுலா துறையும் பாதிக்கப்பட்டது.பலர் இலங்கைக்கான பயணத்ததை ரத்து செய்திருந்தார்கள். 51 நாட்களில் ரூபாவின் பெறுமதி 3.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டுக் கையிருப்பு 7991.5மில்லியன் டொலரில் இருந்து 6985.4 மில்லியன்களாக வீழ்ச்சியடைந்தது. 

ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததால் நாட்டுக்கு கொண்டுவரும் மூலப்பொருட்களின் விலைகள் உயரும். இதனால் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். இதனை முகாமைத்துவம் செய்து ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்பிருந்ததை விட சிறந்த நிலைக்கு நாட்டை மீள உயர்த்துவதற்கு எமக்கு பொறுப்பாகும்.. வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழக்கூடிய வகையிலான சூழலை உருவாக்கவும் இருக்கிறோம். 

சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் நாம் எதிர்பார்த்திருக்கிறோம். 

2018 ஒக்டோபர் 27 ஆம் திகதியில் இருந்து 51 நாட்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அதிர்விலிருந்து மீள எழுச்சி பெறுவது குறித்தும் கூற வேண்டியுள்ளது. 

''எமக்கு பல்வேறு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கின்றன. அரசியல் நோக்கங்கள் இருக்கிறது. அவற்றுக்கு அப்பால் நாடு குறித்து சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தின் மீது குற்றம் சாட்டுவதால் மாத்திரம் எதிர்காலத்தை வளப்படுத்த முடியாது. பலவீனமான மற்றும் தவறான பொருளாதார திட்டங்களை செயற்படுத்தியதால் எமது நாட்டின் மீது கடன் சுமை ஏற்றப்பட்டது. இதற்காக பெருமூச்சு விடுவதன் மூலம் மாத்திரம் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பிவிட முடியாது. 

இதற்காக காத்திரமான திட்டம் தயாரிக்க வேண்டும். மூலோபாயங்களை உருவாக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.'' இவ்வாறு நான் 2016 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நான் பாரளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறியிருந்தேன். 

51 நாள் ஸ்தீரமற்ற நிலைமை காரணமாக எமக்கு கடுமையாக கஷ்டப்பட்டு செயலாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. அதிகளவில் அர்ப்பணிக்க நேரிட்டுள்ளது. அதிக சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. 

சகல சவால்களையும் வெற்றிகொள்ள நாம் தயாராக இருக்கிறோம். சகல சவால்களுக்கும் பலமாக முகங்கொடுப்போம். 51 நாள் நீடித்த பாதிப்பில் இருந்து நாட்டை உயர்த்துவற்கு நாம் தயார். அது இலகுவான காரியமல்ல. ஆனால் நாட்டின் ஜனநாயகத்திற்கும் மக்களின் இறைமைக்கும் ஏற்பட்ட சவாலுக்கு முகங்கொடுத்து மீண்டும் பொருளாதாரத்தையும் மக்களின் இறைமையையும் மீண்டும் தூக்கிநிறுத்தியது போன்று பொருளாதாரத்தையும் உயர்த்தி வைப்போம். 

இது கடினமானதாக இருக்கும்.கஷ்டங்கள் எழும். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில் மக்கள் நல வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இருக்கிறோம் என்றார். 

இது தொடர்பில் கேள்வி எழுப்பிய விமல் வீரவங்ச, இந்தியாவிடமிருந்து பெறும் கடனுக்காக எமது துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், 

இலகு கடனுக்காக எதனையும் வழங்க வாக்குறுதி வழங்கப்படாது. சார்க் நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படியே இந்தக் கடன்கிடைக்கிறது. துறைமுகங்கள் எமது அரசின் கீழே இருக்கின்றன என்று குறிப்பிட்டார். 

51 நாள் மஹிந்த ஆட்சியினால் தான் இந்தளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறீர்கள். யார் நாட்டை நாசமாக்கினார்கள் என்பது குறித்து ஆராய விவாதத்தம் நடத்த நாள் ஒதுக்க வேண்டும் என பந்துல குணவர்தன எம்.பி கோரினார். 51 நாளில் வெளிநாட்டு கையிருப்பு ஒரு பில்லியனால் குறைவடைந்தது. கடந்த காலத்தில் இந்திய, இலங்கை உட்பட பல நாடுகளில் ரூபாவின் பெறுமதி குறைந்தது என பிரதமர் பதில் வழங்கினார்
பாராளுமன்றில் பிரதமர் விடுத்த விசேட அறிவிப்பு ! பாராளுமன்றில் பிரதமர் விடுத்த விசேட அறிவிப்பு ! Reviewed by Ceylon Muslim on January 11, 2019 Rating: 5