விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் மார்ச் மாத இறுதியில் !

தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம், மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வழங்கப்படுமென, கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடன் கல்வியமைச்சிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த வருடம், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம் வழங்குவதில் காணப்பட்ட தொடர்ச்சியான இழுபறி நிலை அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தபட்ட இந்த நியமனத்தை, தடைகளையும் மீறி வழங்க வேண்டும் என்பதில், கல்வியமைச்சர் அகில்விராஜ் காரியவசம் உறுதியாக உள்ளார் எனவும் அவரின் பணிப்பின் பேரில் அமைச்சு அதிகாரிகள் இந்நியமனம் தொடர்பான பணிகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் மார்ச் மாத இறுதியில் ! விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் மார்ச் மாத இறுதியில் ! Reviewed by Ceylon Muslim on January 24, 2019 Rating: 5