Jan 30, 2019

நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தினையும் அரசு உறுதிசெய்ய வேண்டும் : முஸ்லிம் அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தல்!தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதநிந்தனை செயற்பாடுகளில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கைகளை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கி, அமைதியும் சுபிட்சமும்யும் பாதுகாப்பையும் அரசு உறுதிசெய்ய வேண்டுமென முஸ்லிம் அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராயினும் அவரது நடத்தைகளில் அவ்வாறான அறிகுறிகள் தென்படுமானால் உண்மைகளை கண்டறியும் புலனாய்வுத்துறை, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலிஸ், பாதுகாப்பை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தும் இராணுவம், நீதியை நிலைநாட்டும் நீதித்துறை என நாட்டின் அமைதிக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள அரசாங்கம் அதுகுறித்து மிகுந்த அவதானத்தைச் செலுத்த வெண்டுமென மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் ஊடகங்களில் ஊகங்களும், வதந்திகளும், ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகளும் வெளியிடப்பட்டு வருவதனால் சமூகங்களுக்கிடையே ஐக்கியமும், சகவாழ்வும் பாதிக்கப்படுமென முஸ்லிம் சமூகம் அச்சப்படுகின்றது. எனவே, ஊடக நிறுவனங்கள் ஊடக தர்மத்தைப் பேணி நாட்டின் ஒற்றுமை, ஐக்கியத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பாக 31 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து நேற்றையதினம் விடுத்துள்ள பிரகடனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரகடனத்தை இங்கு முழுமையாகத் தருகிறோம்.

இனங்களின் பன்மைத்துவம் இன்றியமையாததாகும். மதங்களின் பன்மைத்துவம் யதார்த்தமானதாகும். இந்த உண்மைகளை முற்று முழுதாக மதங்கள் அங்கீகரிக்கின்றன. பிற மதங்களை நிந்தனை செய்வதையோ அல்லது புண்படுத்துவதையோ ஒரு போதும் மதங்கள் அங்கீகரிப்பதில்லை.

இஸ்லாம் பிற மதங்களை நிந்தனை செய்வதையும் பிற மத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றது. “அவர்கள் அழைக்கின்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏச வேண்டாம் (06:108)” என புனித அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது. பிற மதக் கடவுள்களை ஏசுவதற்கே அனுமதிக்காத இஸ்லாம் பிற மத நிந்தனையில் ஈடுபடுவதை, பிற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காது என்பது தெளிவான விடயமாகும்.

வரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து, நாட்டின் அபிவிருத்திக்கு பலவகையில் பங்காற்றும் சமூகமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ இடம்பெறும் எந்தவொரு மதநிந்தனை நடவடிக்கையையும் சட்டத்தை மீறிய செயற்பாட்டையும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது. மேலும் இஸ்லாத்தின் பெயரால் இடம்பெறும் எவ்வித தீவிரவாத மற்றும் மதநிந்தனையுடன் தொடர்பான செயற்பாடாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது.

அண்மையில் பௌத்தமத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அசம்பாவிதமொன்று நடந்தேறியிருக்கிறது. சந்தேகத்தின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு, நாட்டிலும் இனங்களிடையேயும் அமைதியும் சுபிட்சமும் மலரத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக வாலிபர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டும் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்கள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் ஊடகங்களில் ஊகங்களும், வதந்திகளும், ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகளும் வெளியிடப்பட்டு வருவதனால் சமூகங்களுக்கிடையே ஐக்கியமும், சகவாழ்வும் பாதிக்கப்படுமென முஸ்லிம் சமூகம் அச்சப்படுகின்றது. எனவே, ஊடக நிறுவனங்கள் ஊடக தர்மத்தைப் பேணி நாட்டின் ஒற்றுமை, ஐக்கியத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் தீவிர மத நிந்தனைப் போக்குடையவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள் என்பது அண்மைக்காலமாக இலங்கையில் நடந்துவரும் நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது. நமது நாட்டில் பிறமத நிந்தனைகளிலும் பிறமத சகோதரர்களின் உயிர்களை, உடைமைகளை துவம்சம் செய்வதிலும் சிலர் அவ்வப்போது ஈடுபட்டுவருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வுகள் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இத்தகைய வன்முறைக் கலாசாரம் தொடருமானால் பல்லாண்டு காலமாக நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்பி வந்த நமது தாய்நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் சவாலுக்குட்படும் அவல நிலை உருவாகும்.

எனவே, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கைகளை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கி, நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அரசு உறுதிசெய்ய வேண்டும். அத்துடன் வன்முறைக்கும், மத நிந்தனைக்கும் இட்டுச்செல்லும் தீவிரவாத சிந்தனைகளைத் தடுத்து நிறுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு அளப்பரியது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராயினும் அவரது நடத்தைகளில் அவ்வாறான அறிகுறிகள் தென்படுமானால் உண்மைகளை கண்டறியும் புலனாய்வுத்துறை, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலிஸ், பாதுகாப்பை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தும் இராணுவம், நீதியை நிலைநாட்டும் நீதித்துறை என நாட்டின் அமைதிக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள அரசாங்கம் அது குறித்து மிகுந்த அவதானத்தைச் செலுத்த வெண்டுமென கேட்டுக் கொள்கின்றோம் என அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஆலோசனைக்கு நல்லிணத்திற்குமான சபை, அல்கபால பவுண்டேஷன், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம், அல்- முஸ்லிமாத், அஸ்-ஸபாப், இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், இலங்கை குடும்ப நிவாரண நிதியம், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஸ்ரீலங்கா அரபுக் கல்லூரிகள் சம்மேளனம், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு (ஐ.ஐ.ஆர்.ஓ.), ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம், ஜமாதுஸ் ஸலாமா, இலங்கை ஜமாஅத்துல் அன்சாரி சுன்னாதுல் முஹம்மதிய்யா, ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனம், மர்கஸ் இஸ்லாமிய நிலையம், முஸ்லிம் எய்ட், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, நிதா பவுண்டேஷன், ஷததுலிய்யா தரீக்கா, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், வாமி, அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான உலக கலாசார நிலையம், ஸம் ஸம் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்தே மேற்குறித்த பிரகடனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுஹைல்
விடிவெள்ளி
 


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network