ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க அனைத்துத் தகுதிகளையும் எனக்கு உள்ளது - தினேஷ் குணவர்தன

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க அனைத்துத் தகுதிகளையும் தான் கொண்டுள்ளதாகவும், தான் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமை அனுமதித்தால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுக் காட்டுவதாகவும் அவர் சவால் விட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக கோத்தபாய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்தன, சமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

இவர்களில் பிரபலமானவர்கள் யாரோ அவரே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தகுதி பெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே தினேஷ் குணவர்தன எம்.பி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே இந்த விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி எனப் பல கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.இந்தக்கூட்டணி பிளவுபடாத வகையில் தான் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

வேட்பாளர்களாகப் பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில் எனது பெயரும் இருப்பது உண்மைதான்.நான் தகுதியுடையவன் என்றபடியால் தான் எனது பெயரையும் கட்சியின் தலைமை பரிசீலித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க அனைத்துத் தகுதிகளையும் எனக்கு உள்ளது - தினேஷ் குணவர்தன ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க அனைத்துத் தகுதிகளையும் எனக்கு உள்ளது - தினேஷ் குணவர்தன Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5