தொற்றா நோயை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக சுகாதார அமைச்சு உலக வங்கியுடன் இணைந்து ஐந்து வருட வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதன் பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளபோதிலும்,இந்த வருடம் மாகாணங்களுக்கு இது விஸ்தரிக்கப்படவுள்ளது என்றும் கிழக்கு மாகாணத்தில் இதைத் தொடக்கி வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கை 11 ஆம் திகதி திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 12 ஆம் திகதி சம்மாந்துறையிலும் பைசல் காஸிமின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று காலை 8ஆம் திகதி சுகாதார அமைச்சின் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உலக வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் தொடங்கப்படும் இந்த வேலைத் திட்டம் நாடு பூராகவும் உள்ள 550 வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒவ்வோர் ஊர்களிலும் உள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைத்திய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சைகளை வழங்கி அவர்களைக் குணப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் வைத்திய வசதிகள்,கட்டடங்கள் இல்லாவிட்டால் அந்தக் குறைகளும் இந்தத் திட்டத்தின் ஊடாக நிவர்த்தி செய்யப்படும்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: