வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம்!

அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு.
 
வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, பொருத்தமான இடத்தில் குப்பைகளை கொட்டும் மாற்று திட்டம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று காலை (31)அரச அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் ஹனிபா , மேலதிக அரச அதிபர் மற்றும் நகர சபை,பிரதேச சபை தலைவர்கள் உட்பட அதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

வவுனியா குப்பை மேடு பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வருகின்றது. கடந்த வாரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்திய போது, அரச உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய தற்காலிகமாக அவை நிறுத்தப்பட்டன.

அரச அதிபர் ,மேலதிக அரச அதிபர் ,நகர சபை,பிரதேச சபை தலைவர்கள் அதிகாரிகள் இணைந்து வேறு மாற்றிடங்களை குப்பை கொட்டுவதற்காக அடையாளப்படுத்தி இருக்கின்றனர்.நாளை வெள்ளிக்கிழமை (01)அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்று இடங்களில் சாத்தியமான, மிகவும் பொருத்தமான ஓரிடத்தை அவர்கள் தெரிவு செய்வர்.

அதன் பின்னர் ஒரு வார காலத்துக்குள் அதற்கான திட்ட வரைபு, நிதிசெலவீனங்களின் அறிக்கை ஆகிய வற்றை எனது அமைச்சுக்கு அனுப்பி வைப்பர்.உரிய ஆவணங்கள் கிடைத்த பின்னர் நானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வோம்.

மேற்கொண்டு இதற்கான நிதிகளை பெற்ற பின்னர் விஞ்ஞான தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண முடியும். எமது இந்த முயற்சிக்கு வன இலாக்கா மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...