சர்வதேச பாடசாலைகளின் அனுமதி இரத்து செய்யப்படும் !


மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் சாலி தெரிவித்தார்.

போதுமான வசதிகள் இல்லாத பாடசாலைகளை சீராக்க நடவடிக்கை எடுக்க தவறினால் அவைகளின் அனுமதி இரத்துச் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஆளுநர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் அனோமா டயஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிள்ளைகள் பாடசாலையில் கற்பதற்குரிய உகந்த சூழல் கட்டாயம் இருக்கவேண்டும். சில முன்னணி சர்வதேச பாடசாலைகள் பாராட்டத்தக்க சேவைகளை வழங்கி வருகின்றபோதும் மேல் மாகாணத்தில் பல இடங்களில் வர்த்தக நோக்கத்துடன் சர்வதேச பாடசாலைகள் பல மழைக்காளான்கள் போல தோன்றியுள்ளன.

அப்பாடசாலைகளில் வகுப்பறைகள் போதிய இடவசதிகள் இல்லை. அத்துடன் வகுப்பறைக்குரிய அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன என தெரிவித்த அவர் இப் பாடசாலைகளிலுள்ள வசதிகள் மற்றும் சேவைகளை ஆராய்வதற்கென ஒரு விஷேட குழுவை அனுப்பவுள்ளதாக கூறினார். சர்வதேச பாடசாலைகள் வர்த்தக கம்பனிகளின் கீழ் பதிவுசெய்யப்படுவதாகவும் கல்வி நடவடிக்கைகளில் அவை அக்கறையுடன் செயற்படுவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் அனோமா டயஸ் ஆளுநருக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...