Feb 13, 2019

பிரதி தவிசாளர் விவகாரம்: காரைதீவு பிரதேச சபையில் மீண்டும் பரபரப்பு!

பிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை

வரவு - செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு பிரதேச சபையில் பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைதீவு பிரதேச சபையின் 12 ஆவது அமர்வு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. அனைத்து உறுப்பினர்களும் அமர்வுக்கு வந்திருந்தனர். கூட்டம் குறித்த அறிவித்தல் நேர காலத்துடன் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை கிளப்பி பிரதி தவிசாளர் ஜாஹீர் கடுமை தொனியில் உரையாற்றியதுடன் வெளிநடப்பு செய்து வெளியேறி சென்றார். இவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசாவும் வெளியேறினார்.

பிரதி தவிசாளர் வெளியேறி சென்ற பிற்பாடு ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து அவர் சபையையும், தவிசாளரையும் அவமானப்படுத்தி விட்டார் என்று குற்றம் சாட்டி பிரதி தவிசாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் பஸ்மிர் முதலில் வாய்மூலமும், பின்னர் தவிசாளர் கேட்டு கொண்டதன் பெயரில் எழுத்துமூலமும் கோரிக்கை விடுத்தார். இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சி. ஜெயராணி வழி மொழிந்தார். இதில் யாருக்காவது எதிர்ப்பு இருக்கின்றதா? என்று தவிசாளர் வினவியபோது காரைதீவு மகா சபையின் சுயேச்சை குழு உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் பூர்வாங்க ஆட்சேபனை முன்வைத்தார்.

இதை அடுத்து இவ்விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆறுமுகம் பூபாலரட்ணம், மு. காண்டீபன், எம். எச். எம். இஸ்மாயில், எம். றனீஸ் ஆகிய 04 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். மறுபுறத்தில் தவிசாளரின் வாக்குடன் சேர்த்து ஆதரவாக 05 வாக்குகள் கிடைத்தன. காரைதீவு மகா சபை சுயேச்சை குழுவின் மற்றொரு உறுப்பினரான இராசையா மோகன் நடுநிலை வகித்தார். 

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதி தவிசாளர் ஜாஹீர் ஒரு மாத காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் தடை விதிக்க முடியும் என்கிற தீர்மானத்தை தெரிவித்து இதை சட்ட ரீதியாக நிறைவேற்ற அடுத்த அமர்வில் பிரேரணையாக கொண்டு வருவது என்று அறிவித்தார்.

அத்துடன் பிரதி தவிசாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்ற விடயத்தை கிழக்கு மாகாண ஆளுனர், உள்ளூராட்சி அமைச்சு செயலாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு பிரதேச சபையின் செயலாளர் அ. சுந்தரகுமாருக்கு தவிசாளர் ஜெயசிறில் அறிவுறுத்தினார்.

இதே நேரம் அன்று மாலை சம்மாந்துறையில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹாரிஸால் நடத்தப்பட்ட கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் என்கிற வகையில் ஜாஹீர் கலந்து கொண்டதுடன் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையின் செல்லுபடியாகின்ற தன்மை குறித்து அங்கு வந்திருந்த உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உயரதிகாரிகளிடம் வினவினார். ஒரு உறுப்பினர் சபையில் இல்லாதவிடத்து அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று துறை சார்ந்த நிபுணர்களால் அவருக்கு எடுத்து கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை வலிதற்றது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு பிரதி தவிசாளர் ஜாஹீர் நேற்று செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் முறையிட்டார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network