Feb 12, 2019

எங்களை ஏமாற்றிவிட்டார்கள் - தமிழ் மக்கள் அமைச்சர் ரிசாத்திடம் அழுகை-ஊடகப்பிரிவு-

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் (இந்திய வீடுகள்) என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம் என்ற பெயர்களில் நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் முறையிட்டனர்.

மன்னார் வெள்ளாங்குளம் , தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சரை , சந்திக்க வந்த இந்த அயற்கிராம மக்கள் வாழ்க்கையில் தாம் பட்டுவரும் அவஸ்தைகளையும் அவலங்களையும் அமைச்சரிடம் வேதனையுடன் விபரித்தனர்.

"இந்த மூன்று கிராமங்களில் உள்ள பிள்ளைகளும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாங்குளத்திற்கு நடந்து சென்றே அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது . மாணவர்களை தனியே அனுப்ப முடியாத நிலை இருப்பதால் பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக செல்ல முடியாத நிலையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது. குடியேறிய ஆரம்ப காலங்களில் சுமார் 2 வருடங்களாக பாடசாலை பஸ் சேவை ஒன்று நடத்தப்பட்டு வந்த போதும் பின்னர் அதனையும் நிறுத்தி விட்டனர் " என்று முறையிட்ட அவர்கள் தமது துன்பங்களை அமைச்சரிடம் தெரிவித்தனர்.


" இந்திய வீடுகள் என்ற பெயரில் எமக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளின் ஜன்னல்கள் நொருங்கிக்கிடக்கின்றன. மழை காலங்களில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள்ளே நீர் வருகின்றது. அதுமட்டுமன்றி வீடுகளில் உறுதியான தளங்கள் போடப்படாததால் வீட்டுக்குள்ளே நீர் ஊற்று கிளம்புகிறது. இரவு நேரங்களில் மழை வந்தால் நாங்கள் படுத்த பாயை சுருட்டி வைத்து விட்டு நீரை வெளியே எத்த வேண்டிய நிலையே இருக்கின்றது.இந்த வீட்டின் நிலைமையை அமைச்சராகிய நீங்கள் வந்து பார்வையிட வேண்டுமென நாம் அன்பாய் வேண்டுகின்றோம் . எமது நிலைமைகளையும் நாம் அன்றாட வாழ்வில் எதிர் நோக்குகின்ற கஷ்டங்களையும் நீங்கள் பார்க்க வேண்டும்." என்று பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் "எத்தனை குடும்பங்கள் அங்கே வசிக்கின்றன எனக்கேட்ட போது அந்த கிராம மக்கள் "72 குடும்பங்கள்" என பதிலளித்தனர். "உங்களுக்கு வேறு என்ன தேவைகள் இருக்கின்றன" என அமைச்சர் வினவிய போது இந்த வீட்டை திருத்தி தரவேண்டும் அல்லது புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அந்த ஊர்மக்கள் , "எங்களது உண்மையான கஷ்டங்களை தெரிவிக்கின்ற போது , வீடு கட்டித்தந்தவர்களுக்கு இந்த முறைப்பாடு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை. வீடுகளை தந்த போது எங்களுக்கு ஆசை வார்த்தைகளையே கூறினர் , கொம்பியூட்டரில் அடித்துக்காட்டி "இப்படியான வீடுகளை விட்டு விடாதீர்கள் " என நம்பிக்கை தந்தனர். தளபாடங்கள் தருவோம், ஊரில் ஆஸ்பத்திரி ஒன்றை கட்டித்தருவோம் என்றெல்லாம் அந்த அதிகாரிகள் எமக்கு உறுதியளித்தபோதும் இதுவரையில் இந்த வீட்டை தவிர எதுவுமே கிடைக்கவில்லை. சில வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. என்றும் அவர்கள் வேதனைப்பட்டனர்.

எங்களுக்கென்று ஒரு தொழிலில்லை போக்குவரத்து வசதியும் இல்லை , ஆகக்குறைந்தது ஒரு பைசிக்கிளாவது இல்லை . இங்குள்ள கிராம மக்களில் பலர் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்". என்று சேவா லங்கா கிராம மக்கள் தெரிவித்தனர்.

"இலுப்பைக்கடவை, மடுவலயம் , தட்சணா மருதமடு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாழ்ந்த மக்கள் 2012 ஆம் ஆண்டு கணேச புரத்தில் குடியேற்றப்பட்டோம். விதவைகள் , ஊனமுற்றோர் , கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையிலேயே இந்த இந்திய வீடமைப்புத்திட்டத்தை எமக்கு அமைத்து தந்தனர். ஆனால் வீடுகள் பல இப்போது படிப்படியாக தகர்ந்து கொண்டு செல்கின்றது. வாழ்விலே நம்பிக்கை இல்லாத நிலையில் மிகவும் பரிதாப நிலையில் இருக்கின்றோம் . எமது கிராமத்தில் உள்ள 128 பிள்ளைகள் தேவன்பிட்டி,வெள்ளாங்குள பாடசாலைகளுக்கு நடந்தே வந்து கல்வி கற்கின்றனர். சில வேளைகளில் வீதி விபத்துக்களிலும் அகப்படுகின்றனர் .ஐந்தாம் ஆண்டு வரையே கணேச புரத்தில் ஒரு சிறிய பாடசாலை இருக்கின்றது. அதற்கு மேலே படிப்பதற்கு மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் நடந்து செல்லவேண்டும். எமது கிராமத்திற்கு உதவி செய்ய வரும் தொண்டு நிறுவனங்கள் காணிகளுக்கு பெர்மிட் இல்லாததால் இடையே கைவிட்டு செல்கின்றனர்.

இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர், அவசரமாக பஸ் சேவை ஒன்றை இந்த பிரதேசத்திற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இ.போ.ச . அதிகாரிகளுடன் உரையாடியதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டார். அத்துடன் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி உதவுவதாக உறுதியளித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network