நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் முரண்பாடுகள் ஆரம்பம்?

 Mohamed Nisfer
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உயர் மட்ட முக்கியஸ்தர்களுக்குள் முரண்பாடுகள் ஆரம்பித்திருப்பதை அன்மைக்கால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.
 
காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி நகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில் தனது நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.


கட்சியின் மீளழைத்தல் எனும் திட்டத்திற்கமையவும் இன்னுமொருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கவும்தான் தான் இராஜினாமாச் செய்ததாக ஊடகங்களில் அவரின் இராஜினாமாவுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் அவர் சுய விருப்பிலேயே இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிய வருகின்றது.


அவரை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சூறா சபை இராஜினாமாச் செய்யுமாறு எந்த சந்தர்ப்பத்திலும் கோரவில்லை என அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையிலேயே அவர் இப்பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.


அதே போன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு இடம் பெற்ற பேராளர் மாநாட்டின் போது அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நழீமி தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் பொதுச் செயலாளர் என்ற அந்த பதவியை அவர் ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது அந்தப்பதவியை வைத்து செயற்பட்டதாகவோ தெரிய வில்லை.


இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உள்ளுர் சூறா சபையின் கட்டமைப்பு அல்லது ஒழுங்கமைப்பு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியும் பலராலும் கேட்கப்படுகின்றது.


கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி மட்டத்திலான செயற்பாடுகளும் அதன் வீரியத்தன்மையும் வலுவிழந்துள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிறாஜ் மசூர் அன்மையில் அக்கறைப்பற்றில் அவர் எழுதிய கவிதை நூல் ஒன்றை வெளியிட்டு வைத்தார்
அந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு காத்தான்குடியிலிருந்து கட்சியின் சில உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரை கௌரவித்திருந்தாலும் கட்சியின் பிரதான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாக அங்கு காணவில்லை.


எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி உள்ளுர் முக்கியஸ்தர்களின் ஒன்று கூடலொன்று 27.01.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி கடற்கரையிலுள்ள கடாபி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


அந்த முக்கிய ஒன்று கூடலுக்கு மேற்படி அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நழீமி கலந்து கொள்ள வில்லையெனவும் தெரிய வருகின்றது.


இந்த ஒன்று கூடலில் வட்டார அமைப்பாளர் தெரிவு மாவட்ட அமைப்பாளர் தெரிவு என்ற விடயங்கள் இருந்த போதிலும் கூட அவைகள் இடம் பெற்றதாக தெரியவில்லை.


இவ்வாறான விடயங்களை வைத்து அவதானிக்கும் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன என்பதையே காட்டுகின்றது.


இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 2ம் திகதி கிண்ணியாவில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பேராளர் மாநாட்டில் பேராளர் மாநாட்டின் ஆரம்ப வைபவத்திற்கு அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி அவர்கள் வரவில்லை என்பதும், பின்னர் வந்தவர் பின்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும் பேராளர் மாநாட்டின் எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை, குறைந்த பட்சம் தனது சேர்ட்டில் ஒரு BADGE ஐ கூட குற்றிக்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற 71 வது சுதந்திர தின நிகழ்விலும் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருந்தாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆணிவேர் பிர்தௌஸ் நளீமி என்பதே யதார்த்தம் .
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் முரண்பாடுகள் ஆரம்பம்?   நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள்  முரண்பாடுகள் ஆரம்பம்? Reviewed by Ceylon Muslim on February 05, 2019 Rating: 5