தூக்குத் தண்டனைக்கு பெயர்கள் அனுப்பி வைப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள் எனவும், எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல அறிவித்துள்ளார்.
இவர்கள் 18 பேர் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிமடயில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அமைச்சர் தலதா அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ஒருவரையாவது தூக்கில் போட்டால் தான் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் அச்சத்தை ஏற்டுத்தலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...