Feb 5, 2019

எது சுதந்திரம்?


 Raazi Muhammeth Jabir
Image result for sl independence day                                               
அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’’ என்ற புத்தகத்தில் வரும் ‘குன்தா கின்தே’ என்ற அடிமையைப் போன்றவர்கள் நீங்கள்.நானும்தான்.

குன்தா கின்தே ஆபிரிக்காவின் உயர் குடும்பத்தில் பிறந்தவன்.அடிமையாகப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு வந்தான்.அவனது பெயரை டொபி என்று மாற்றினார்கள் அடிமை முதலாளிகள்.உன் பெயர் என்ன என்று அவனிடம் கேட்பார்கள்.
அவன் 'குன்தா கின்தே' என்பான்.
கட்டி வைத்து சதை தெறிக்க அடிப்பார்கள்.

உன் பெயர் என்ன?

‘’குன்தா கின்தே’

முதுகில் இருந்து ரத்தம் பீறிட்டுப் பாயும். சாட்டையில் அவனின் சதை ஒட்டிக் கொள்ளும்.

‘உன் பெயர் என்ன?

‘’குன்தா கின்தே’

சாட்டை கிழியும்.

அடியின் வலி தாளாமல், அரை மயக்கத்தில் இறுதியாக அவன் சொன்னான்.

‘’டொ...பி........”

அவனின் ஆபிரிக்க அடையாளம் அன்றோடு அழிந்து போனது.

அடி விழ விழ அடிபணிய ஆரம்பிக்கும் மனிதன் அடி விழாத போதும் அடி விழும் என்ற பயத்தினால் அவனது பரம்பரையும் அடிமையாகிப்போகிறான்.

உங்கள் இதயத்தைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள்.இன்று உங்கள் உள்ளத்தில் பேரலைபோல் பீறிட்டுப் பாய்வது தேச பக்தியா அல்லது தேச பக்தி என்று புடவைக்குள் நீங்கள் சுற்றிவைத்திருக்கும் பீதியா?

எனக்குப் புரியவே இல்லை.இந்த தேச பக்தி, தேசிய கொடியை பள்ளியில் ஏற்றுவது,ஊர்வலம் போவது,கொடியை நெஞ்சில் குத்துவது என்பவை எல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்தது?

பள்ளிவாசல் முதல் பாடசாலை வரை, மாதர் மத்ரசா முதல் மாகாணப்பணிமணை வரை முஸ்லிம் பிரதேசங்களில் எல்லாம்,பிள்ளைகளின் கன்னத்தில் இருந்து பெண்களின் கைக்குட்டை வரைக்கும் தேசியக் கொடியை பச்சை குத்திக் கொண்டு ஊர்வலம் போவது சில காலங்களுக்கு முன்னர் இருக்கவே இல்லையே.எப்படி இன்று உக்கிரமானது?

இந்த நாட்டின் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் பாசமும் காதலும் ஏன் ஆரம்பத்தில் இருந்து உங்களுக்கு இருக்கவில்லை.ஏன் இப்பொழுது மட்டும் பீறிட்டுப் பாய்கிறது?

நீங்கள் உங்கள் இதயத்தில் இடுக்குக்குள் ஒழித்து வைத்திருக்கும் இந்த ‘சுதந்திர உண்மையைச்’ சொல்கிறேன் கேளுங்கள்.

ஐந்து வருடங்களாக உங்களுக்குள் ஊறியிருக்கும் இந்த தேசப்பற்றுக் காரணம் நீங்களும் நானும் வாங்கிய அடி.வேறு எதுவும் இல்லை.இல்லை என்று சொல்லாதீர்கள்.நீங்கள் மறைக்கப்பார்ப்பது தெரிகிறது.

அளுத்கமவில் வாங்கிய அடி,திகணயில் வாங்கிக் கட்டிய அடி,அம்பாரையில் வாங்கிய அடி, ஹலாலுக்கு வாங்கிய அடி,ஹிஜாபுக்கு வாங்கிய அடி,கடைகள் எரிக்கப்பட்ட போது வாங்கிய அடி., நாக்கைப் புடுங்கிக் கொண்டு தூக்கில் தொங்கும் அளவிற்கு கேட்ட ஏச்சு..

இவை எல்லாம் சேர்ந்து எம்மில் ஒரு மனநிலையை உருவாக்கியிருக்கிறது.

‘இது அவர்களின் நாடு.நாம் சிறுபான்மையினர்.நாம் இங்கே இரண்டாம் தரப் பிரஜை.நாம் அடங்கித்தான் போக வேண்டும்.நாங்களும் நாட்டோடுதான் இருக்கிறோம் என்று அவர்களைத் திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.அதன் பிறகு அடிக்கமாட்டார்கள்’’

பள்ளியில் தேசியக் கொடியைக் கட்டி நாட்டுப் பற்றைக் காட்டுவோம்.

எந்தப் பிழையும் செய்யாமல் எமது பிள்ளைகள் பிடிபட்டாலும் ஆமுதுருவிடம் சென்று மன்னிப்புக் கோருவோம்.

பள்ளிக்குள் பண ஓத வைப்போம்.

பன்சலவைக் கழுவிக் கொடுப்போம்.

மத்ரசாவில் தேசியக் கொடியேற்றி தேசப்பற்றைக் காட்டுவோம்.

ஞானசாரவை மன்னித்து எமது நல்ல உள்ளத்தைக் காட்டுவோம்.

மலர்த்தட்டோடு சென்று வணக்கம் வைப்போம்.
தேசப் பற்று ஈமான் என்று குத்பா ஓதுவோம்.

முஸ்லிம்களின் ஒவ்வொரு தலத்திலும் கொடியேற்றிக்காட்டுவோம்.

இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.அடிக்க அடிக்க எமது காலில் விழுவார்கள் அவர்கள் என்று.அது இன்று அழகாக நடக்கிறது.

அடி எமக்குள் தேசியபக்தியை வளர்த்திருக்கிறது.
இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை 1948ல் இருந்து இதே வேகத்தோடும் காதலோடும் செய்து கொண்டு வந்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அடி தீவிரமாக விழுந்ததும் தேசியக் கொடியோடு சரணடைவதற்கு காரணம். தேசப்பற்றல்ல,பயம்.இன்னும் அடிவிழும் என்ற பயம்.

அவர்கள் எதைச் சாதிக்க நினைத்தார்களோ அது நடந்து விட்டது.இது ஒரு செயற்கையான தேசபக்தி.நான் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜை என்பதை நான் ஏற்றுக் கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டின் வாரிசுகள் என்பதை நீங்கள் தந்த அடியின் காரணமாக நான் ஏற்றுக் கொண்டேன் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கப்பட்ட நாம் தேசியக் கொடியால் முகத்தை மூடிக் கொள்கிறோம்.

இதனை அதிகமாகக் கொண்டாடுவது மத்ரசாக்களும்,தாடி வைத்தவர்களும்தான். என்ன தெரியுமா?. பயம். தாடி வைத்த என்னைத் தீவிரவாதி என்று சொல்லி விடுவார்களோ.மத்ரசாவுக்கு முன் வந்து ஆர்ப்பாட்டம் செய்திருவார்களோ என்ற பயம் ஆன்மீகவாதிகளை அதிகம் தேசப்பற்றாளர்களாகிவிட்டது வாங்கிய அடி.

அப்படியானால் நாட்டை நேசிப்பது தவறென்கிறீர்களா என்று கேட்கலாம்.இல்லவே இல்லை.வாங்கிய அடியின் காரணமாக பௌத்த தேசியவாதத்திற்கு தேசப்பற்றாளர்களாக உங்களைக் காட்ட முனைவதுதான் பிழை என்கிறேன்.தேசப்பற்றாளர்களாகக் காட்டினால் எம்மை அடிக்காமல் விடுவார்கள் என்ற மனனிலையைப் பிழை என்கிறேன்.உரிமையை விட்டுக் கொடுத்து அடிமையாய் வாழ்ந்தால் அடிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தைத் தவறென்கிறேன்.எதிர்த்துப் பேசாமல் இறங்கிப் போகும் கோழைத்தனத்தை தவறென்கிறேன்.

எனது மகளுக்கு கூறினேன்.

‘’மகளே இந்த நாடு அவர்களுடையது மட்டுமல்ல.உன்னுடையதும்தான்.ஒரு அப்புஹாமிக்கும்,ஆதிசேசனுக்கும் இருக்கும் உரிமை அனைத்தும் உனக்கும் இருக்கிறது.நீ இரண்டாம் தரப் பிரஜை அல்ல.நீயும் இந்த நாட்டின் முதல்தரப் பிரஜைதான்.ஒரு பௌத்தனுக்கும் தமிழனுக்கும் இருக்கும் அனைத்து உரிமையும் உனக்கு இருக்கிறது.அந்த உரிமையை இந்த நாடு உனக்குக் கொடுக்கும் வரை நீ நேரான வழியில் போராடு.

உனது காணியில் நீ வாழவைக்கப்படும் வரை,
உனது பள்ளியில் நீ அமைதியாகத் தொழ அனுமதிக்கப்படும் வரை
உனது ஜனானாயக உரிமைகள் மதிக்கப்படும் வரை
உனது கலாச்சாரம் ஏற்றுக் கொள்ளப்படும் வரை
பஸ்ஸில் ‘’மதகுருக்களுக்கு மட்டும்’ என்ற இடத்தில் ஒரு சிங்களவர் எழுந்து ஒரு மௌலவிக்கு இடம் கொடுக்கும் வரை…

இந்த நாடு உனது உரிமைகளை உனக்குக் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த நாட்டின் மீது உனக்கு நேசம் வரும்.அந்த நேசம் உண்மையானது. அதைக் கொண்டாடு.இந்த நாடு உனது உரிமைகளை உனது மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் மறுக்கும்போது பயந்து நடுங்கி தேசியபக்தி என்ற பொய்யான போர்வையை அணிந்து வேஷம் போடாதே.

ஓ,குன்தா கின்தேக்களே,

உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுதந்திரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா.

ஆம் என்றால் சொல்லி அனுப்புங்கள்.உங்களோடு கொடியேற்ற வருகிறேன்.

இல்லை என்றால் வாருங்கள் ஜனநாயக ரீதியில் போராடலாம்.

உரிமையை இழந்த சுதந்திரத்திற்கு தேசப்பக்தி என்று பெயரிட்ட அந்த கோழை யார் என்று தேடலாம்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network