சாய்ந்தமருது, பள்ளி தலைவர் மீது சந்தேகம் உள்ளது - ஹரீஸ்

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள சாய்ந்தமருது மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலான கூட்டம் 26 ஆம் திகதி திட்டமிட்டபடி கொழும்பில் நடைபெறுமென உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ எச். எம்.எம் ஹரீஸ் அவர்கள் என்னிடம் இன்றிரவு (25) 11.23 மணியளவில் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களுடன் நான் பல விடயங்கள் குறித்து உரையாடினேன்.

இதன்போது அவர் கூறியனவற்றை இங்கு வெளியிடுகிறேன்.

‘…இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாத் பதியுதீன் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இந்த இரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வுள்ளனர்….’

‘…இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக் கூடிய தீர்மானங்கள், கருத்துக்களின் அடிப்படையில் இந்த விவகாரம் முன்னெடுக்கப்படும்…’ என்றார்.

, இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்கள் மேலும் என்னிடம் தெரிவிக்கையில்,

‘சாய்ந்தமருதுக்கு நகர சபையை பெற்றுத் தராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை உடைத்துக் காட்டுவோம்' என சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தன்னை மனவேதனைப்படுத்தியதாகவும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை அவர் தெரிவித்திருக்கக் கூடாது என்றும் கூறி, தனது மனவேதனையை என்னிடம் வெளியிட்டார் .

‘சாய்ந்தமருதுக்கு நகர சபையை பெற்றுத் தராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை உடைத்துக் காட்டுவோம் என்று வை.எம். ஹனீபா அவர்கள் எங்களது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டும் இலக்கு வைத்து தெரிவித்துள்ளமை தனக்குச் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை உடைத்துக் காட்டுவோம் என்று எங்களது கட்சியை மடடுமே அவர் இலக்குவைத்து கூறுவதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் ஏதும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளாரா என்ற கேள்வி, சந்தேகம் தனக்குள் எழுவதாகவும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

அவருடனான எனது தொலைபேசி உரையாடலை குரல் வழிப் பதிவிட அவர் விரும்பவில்லை. இருப்பினும் என்னிடம் அவர் கூறிய இந்த விடயங்களை வெளியிடுவதில் எவ்வித ஆட்சேபனை இல்லை எனக் கூறி அதற்கான அனுமதியைத் தந்தார். அதற்காக அவருக்கு நன்றிகள்.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சாய்ந்தமருது, பள்ளி தலைவர் மீது சந்தேகம் உள்ளது - ஹரீஸ் சாய்ந்தமருது, பள்ளி தலைவர் மீது சந்தேகம் உள்ளது - ஹரீஸ் Reviewed by NEWS on February 26, 2019 Rating: 5