மு.காவினால்; ஏறாவூர் வைத்தியசாலைக்கு இரு முறை அடிக்கல் - நடந்தது என்ன

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பதில்... 

“ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பௌதிகவளப் பற்றாக்குறைகளை நீக்கும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் பணிபுரிந்த காலத்தில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டடங்களை அமைப்பதற்கான வரைவுகள் உருவாக்கப்பட்டு புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு என்னால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அக்கால கட்டத்தில் எனது பதவிக்காலம் முடிவடைந்ததால் அப்பணி தேக்கம் கண்டது. எனினும், இக்கட்டடத்தை அமைப்பது தொடர்பில் நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த நிலையில், தற்போது சீன அரசின் நிதி உதவியுடன் மீளவும் இப்பணிகள் ஆரம்பிக்கப்படும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளமை மகிழ்வளிக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்துதந்து, கட்டடத்துக்கான பணியை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று மேலும் தெரிவித்ததாவது:-

“ஏறாவூர் வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பாக கடந்த வாரம் எனது தலைமையில் இப்பிரதேசத்தை சேர்ந்த நகர சபை உறுப்பினர்கள் அடங்கலாக முக்கியஸ்தர்கள் சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசிமுடன் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது தடைப்பட்டிருந்த இந்தக் கட்டட நிர்மாணம் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், அங்கு நிலவும் மனிதவளப் பற்றாக் குறைகள் குறித்தும் அவரது கவனத்துக்கு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது துரித முயற்சியின் பயனாக புதிய கட்டடம் அமைவதற்காக கடந்த ஞாயிறன்று மீண்டும் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ள சீன அரசுக்கு எமது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன், இங்கு நிலவும் முக்கிய குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதற்கும் சுகாதார அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மேலும், இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி இப்பணிகள் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட பூரண உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நல்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...