பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! மீண்டும் தேசிய அரசாங்கம்! மோதல் நிலை தீவிரம் அடையுமா?

இலங்கையில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 48 இற்கு அதிகரிக்காமலும், அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கை 45 இற்கு அதிகரிக்காமலும் இருக்குமாறு தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்ககொள்ள உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மூன்றரை ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் உடைந்திருந்தது.
எனினும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் தற்போது ஆட்சியில் உள்ளது. தனியொரு கட்சியாக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் 19வது அரசியல் திருத்த சட்டத்திற்கு அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
சமகாலத்தில் செயற்படும் அமைச்சரவையை நியமிப்பதற்காக பரிந்துரை செய்திருந்தவர்கள் பலரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு சவால் விடும் வகையில் மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ரணிலின் நோக்கமாகும்.
இதன் காரணமாக இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு குழப்ப நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி மீது அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியாக ரணில் தரப்பினருடன் இணையவுள்ளனர். இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமை தாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...