இந்து சமுத்திர ஸ்திரத்தில் பாக் - இந்திய புதையல்கள்!

சுஐப் எம். காசிம்

காஷ்மீர் விவகாரம் காட்டுத் தீ போல் பரவி மக்களைப் பீதிக்குள்ளாக்கியமைக்கு எதிரிடையாக அமைந்தது இம்ரான்கானின் சாத்வீகச் சிந்தனைகள். புல்வாமா மாவட்டப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்தியா எடுத்த எத்தனங்கள் ஜனநாயக நாட்டுக்கான பண்பாடாகத் தென்படவில்லை. இத்தனைக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் உள்ளதை இருப்பில் வைத்தே இந்தக் கட்டுரை அளவீடு செய்யப்படுகிறது. 

காஷ்மீர் யாருக்குச் சொந்தம், அங்குள்ள முஸ்லிம்களின் மன நிலைகள் என்ன, நீண்ட கால அரசியல் இழுபறிக்குள் அகப்பட்டுள்ள அந்த மண்ணை தனி அரசாக அங்கீகரிப்பதா? இவற்றுக்குப் பதில் எப்போதாவது கிடைக்கட்டும்.ஒரு பக்க மனநிலை,நுனிப்புல் மேய்ந்தாற்போல் செய்தி சொல்லும் ஊடகங்கள், ஆட்சி அதிகாரங்களில் நிலைப்பதற்காக அவிழ்க்கப்படும் மதவாதம், தேசிய வாதம், இராணுவ வியூகங்கள். இவற்றின் எதிர்காலங்களைத் தகர்த்தெறிந்துள்ளது அபிநந்தனின் விடுதலை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இந்த நகர்வுகளை இந்தியர்கள் கூடப் பாராட்டியதன் பின்னணி பற்றியே ஆராய வேண்டியுள்ளது. வல்லரசு நாடுகளின் துணையுடன் வளர்ந்துள்ள இத்தேசங்கள் தங்களது சகாக்களின் துணையின்றி போரிட்டாலும் வெற்றி, தோல்விகளை அளவிடுதற்கு எவரும் இவ்விரு தேசங்களிலும் எஞ்சப்போவதில்லை. 

1947 ,1965, 1971, 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த போர்களிலும் இவ்விரு நாடுகளும் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டன. ஆனால் அப்பாவி மக்களின் உயிர்களையும் இராணுவ வீரர்களின் வாழ்வியல் உரிமைகளையும் நாடுகளின் விலைமதிக்க முடியா சொத்துக்களையும் காப்பாற்ற முடியாமல் போயின. இதுதான் இம்ரானின் சிந்தனைகளை துளைத்தெடுத்தன .பாகிஸ்தானின் அதிர்ஷ்டவசமாக மாட்டிக் கொண்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு, இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமென்று எவரும் எண்ணவில்லை.எண்சோதிடரைக் கேட்டிருந்தாலும் அபிநந்தனின் விதி பாகிஸ்தானில் முடிந்தது என்றே கைவிரித்திருப்பர். புலிக்கூட்டில் அகப்பட்ட புள்ளிமானுக்கு உயிர்ப்பிச்சை யார் கொடுப்பது?. விளையாட்டு, வியாபாரம், தொழில்நுட்பம், ஆயுத உற்பத்தி, இராணுவம் அனைத்திலும் அரசியலே எதிரொலிக்கும் ஒரு மரபை இந்நாடுகள் பின்பற்றுகின்றன. சோமாலியாவுடன் இந்தியா தோற்றாலும் பரவாயில்லை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் தோற்கக் கூடாது. இதே போன்றுதான் பாகிஸ்தானியர் மனநிலையும். இவ்வளவு பெரிய பகையும் ,புகையும் இன்று நேற்றா? பொன்விழாக் கண்ட பகை இது. வைர விழாவை எட்டி நிற்கும் திமிர்த்தனம் இது. அபிநந்தனின் ஆத்ம சாந்திக்கான ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து,அவருக்கு பதவியுயர்வு வழங்குவது தான் இனியுள்ள வழியென்று இந்தியா விழி பிதுங்கிய போது இம்ரானின் அறிவிப்பு போர்க் காலங்களில் ஏவப்படும் ஏவுகணை போல் சீறிப்பாய்ந்து வந்தது இந்தியாவுக்கு. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து எதையும் சாதிக்கவில்லை மலைகளில் குண்டுகளைக் கொட்டி மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை சம்பாதித்துக் கொண்டது. 

“இந்திய ஊடகவியலாளர்கள் விரும்பினால் அவ்விடங்களைக் காண்பிக்கவும் தயார்” என்றார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் . ஒருவாறு இந்தியா கூறியதைப் போல் பாகிஸ் தான் எல்லைகளுக்குள் சேதங்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தால் அதிர்ஷ்டவசமாக மாட்டிய அபிநந்தனை விடுவிக்க பிரதமர் விரும்பினாலும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, ஜாவித் பாஜ்வா விரும்பியிருக்கமாட்டார். இராணுவத் தளபதியின் தீர்மானங்களில் பிரதமர் கூடத் தலையிட முடியாதளவுக்கு பாகிஸ்தானில் இராணுவச் சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு தலையீடு செய்த பல பாகிஸ்தான் பிரதமர்களின் ஆட்சிகள் மண்கவ்வச் செய்யப்பட்டுள்ளன . முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீஃப் இந்தப் பின்னணியிலே முன்னாள் இராணுவத்தளபதி முஷர்ரஃபால் கவிழ்க்கப்பட்டார்.இது எதுவும் தனக்கு நடக்கக்கூடாதென்ற விழிப்புடனிருந்து ஜனாதிபதியான முஷர்ரஃப், தனது தோழர் அஷ்பஃக் கயானியை இராணுவத் தளபதியாக்கியமை எல்லாம் சரித்திரம். ஆப்கானிஸ்தானை பின்லேடன் ஆட்டிப் படைக்கும் வரை நமக்கு நிம்மதியே என்றிருந்த முஷர்ரஃப், அல்கைதா தலைவர் பின்லேடனைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். தனக்களிக்கப்பட்ட புகலிடத்திற்கு பல கைம்மாறுகள் முஷர்ரஃபைச் சென்றடைந்ததாகவும் அந்தக்காலத்தில் பல கிசு,கிசுப்புகள். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறி ஐந்து வருடங்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்களுக்கு பின் லேடனின் பணம்தானே கைகொடுத்தது.

இதனால் பாகிஸ்தான் ஜனாதிபதி, முஷர்ரஃபுக்குத் தெரியாமல் அல்கைதா தலைவர் ஒஸாமாபின்லேடனை இலக்கு வைக்க அப்போது 2010 இல் இராணுவத்தளபதி அஷ்பஃக் கயானியை நாடியது அமெரிக்கா. பின்லேடன் தங்கியிருந்த “அப்போட்டாபாத்தில்” அடுக்கு மாளிகையில் அமெரிக்கப் படைகள் இறங்க அஷ்பக்கயானி உதவியமை பின்னர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவ்வாறுதான் பாகிஸ்தானின் பிரதமர் பதவியும், இராணுவத் தளபதியின் அதிகாரமும் எதிரிடையான உரசலை கொண்ட அதிகாரங்கள். .இத்தனை ஆபத்துகளையும் உணர்ந்து தான் இம்ரான் இந்த முடிவுக்கு வந்தார். இந்த முடிவு மோடியின் மதவாதத்துக்கும், தேசப்பற்றுக்கும் வீழ்ந்த பேரிடி. இந்தப்பேரிடியிலிருந்து மோடியைக் காப்பாற்றும் அல்லது இந்திய இராணுவத்தின் கௌரவத்தைத் தேற்றும் வகையில் இந்திய விமானப்படைத் தளபதியின் அறிக்கை உள்ளது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள பாலக்கோட்டை, முஸாபராபாத் பிரதேசங்களில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் எவையும் இலக்குத்தவறவில்லை ஆனால் இழப்புக்களின் எண்ணிக்கைகைய சரியாகக் கணிப்பிட முடியாது என இந்திய விமானப் படைத்தளபதி தனோவா கூறியுள்ளார். விமானப் படைத்தளபதியாலே கணிப்பிட முடியாததை இந்திய ஊடகங்கள் சில கணிப்பிட்டதே, இதில்தான் இராணுவப் பிழைப்பு உயிரூட்டப்படுகிறது.இந்த உயிரூட்டல் மோடியின் அரசியலுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இப்போது இந்தியர்கள் இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் களமிறங்கவுள்ள ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்காவைத் தோற்கடிக்க பிரச்சாரம் எதுவுமின்றியிருந்த மோடிக்கு புவால்மாத் தாக்குதலும், தான் கொடுத்த பதிலடியும் நல்ல வருமானம் தரும் என்ற பி.ஜே.பி யின் கற்பனையில் இம்ரான்கான் கரிபூசியுள்ளார். இத்தனைக்கும் தனக்காக முன்வைக்கப்பட்டுள்ள நோபல் பரிசுக் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாத இம்ரான் காஷ்மீரின் அமைதி, மக்களின் எதிர்கால நம்பிக்கை, பயங்கரவாதத்தை தோற்கடிக்க அர்ப்பணிப்போருக்கு அப்பரிசை வழங்கலாம்” என்று தனது உயர்ந்த உள்ளத்தை மேலும் ஒருபடி சென்று நிரூபித்துள்ளார். இது ஒரு புறமிருக்க இந்தியக் கவிஞர் ஒருவரின் வரிகளில் தெறித்த பொருட் பிரவாகங்கள் அவரது மனவிகாரங்களை ஒளித் தெறிப்பாக்கியது. “ஆகாய வீரர்களே,அசகாய சூரர்களே” என்று தொடங்கிய வைரமுத்துவின் கவிதைகள் திக்குத்திசை தெரியாமல் ஆனந்தக் கூத்தாடியது. போரைத்தூண்டும், வாழ்த்தும் கவிதைகள் தப்பென்பதற்கில்லை. கள யதார்த்தம் புரியாமல் கவிஞன் எழுதி விட்டான் என்று விட்டுவிடுவோம், அபிநந்தனை விடுவித்த இம்ரான்கானை அவரது கவிப்புலமைகள் பாராட்டவில்லையே.! எழுத்திலுமா? வக்கிரம் என எண்ணி கவியுலகின் எனது நம்பிக்கை தகர்கிறது. 

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (oic) மாநாட்டில் இந்தியாவும் அழைக்கப்பட்டுள்ளது .உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் கூட்டம் இம்முறை அபுதாபியில் இடம்பெறுகிறது. இதற்கு இந்தியா அழைக்கப் பட்டதேன்? இந்தியச்சந்தைகளில் முதலிடும் வர்த்தகப் போட்டிக்குள் பாகிஸ்தானை பலமிழக்கச்செய்யும் முயற்சியாகவே இதனைப் பார்க முடிகின்றது. ஒரு வேளை தன்னைப்பற்றி சுஷ்மாசுவராஜ் எதையும் சொல்லி விடுவார் என்று பயந்தா? இம்ரான்கான் இந்திய இராணுவ வீரரை விடுவித்தார் என்ற பார்வைகளும் களத்தில் உள்ளன.

பாகிஸ்தானின் எல்லைக்குள் போருக்காக மலையேறி வரும் இந்திய இராணுவ வீரர்கள் எல்லைக் கோட்டை நெருங்கும் வேளை “இந்தியா போருக்கு வருவதாக” பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு ஒரே அழைப்பில் (Call) சொல்லும். பத்து நாட்கள் வரை பயணம் மலையேறி களைத்தது மட்டும் தான் இந்தியாவுக்கு எஞ்சி இருக்கும்.

இவ்வாறு ஒருவரையொருவர் வெல்ல முடியாத யுத்தத்தை மனதளவில் வெல்வதற்கான சைகையையே பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது.
இந்து சமுத்திர ஸ்திரத்தில் பாக் - இந்திய புதையல்கள்! இந்து சமுத்திர ஸ்திரத்தில் பாக் - இந்திய புதையல்கள்! Reviewed by NEWS on March 08, 2019 Rating: 5