மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் வர்த்தமானி அறிவித்தல் :அகில விராஜ்

இலங்கையிலுள்ள முஸ்லீம் பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். இதில் கணிசமான அளவு மௌலவி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளார்கள். இந்த மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வெகு விரைவில் வழங்கவுள்ளோம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இப்பாகமுவ தெளம்புகல்ல முஸ்லீம் வித்தியாலயத்தில் ஒரு கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கட்டிடத்தொகுதி அதிபர் எம்.எஸ்.எம்.பௌமி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;

குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு எவ்வகையிலான பாகுபாடுகளுமின்றி மிகவும் கவர்ச்சிகரமான கட்டிடங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான ஆசிரியர் வளங்கள் அதிபர் உள்ளிட்ட அனைத்து கட்டிட வசதிகளும் கணிசமான அளவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டுவஸ் நுவர பகுதியில் இரண்டு முஸ்லிம் பாடசாலையில் சியம்பலாகஸ்கொட்டுவ, கேகுணுக்கோல ஹரியால தேர்தல் தொகுதியில் முஸ்லீம் பாடசாலைகளிலும் கட்டடங்கள் திறந்து வைத்துள்ளோம். இப்படி பார்க்க போனால் முஸ்லீம் பாடசாலைகளை கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.

தற்போது திறந்து வைத்துள்ள கட்டடத்தின் அழகிய தோற்றத்தை பாருங்கள். அது அழகான ஹோட்டல் போன்று காட்சியளிக்கின்றது அல்லவா ? கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை விட ஒரு புதிய மாற்றத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இந்த அழகிய தோற்றமுடைய 1500 இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளது.எல்லா வசதிகளையும் கொண்ட வகுப்பறை கட்டிடங்களாகும். தனித்தனியாக என 40000 மலசலக்கூடம் நிர்மாணித்துள்ளோம்.

அதுமட்டுமல்ல நடமாடும் நூலகம் 3000 வழங்கியிருக்கின்றோம். எதிர் காலத்தில் இந்த கல்வித்துறையில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் சகல வசதிகளையும் பூரணமாக நிறைவேற்றி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொடங்கஸ்லந்த ஐ .தே.கட்சி அமைப்பாளர் எம்.எஸ்.பெரேரா, இப்பாகமுவ கல்வி வலய பணிப்பாளர் காமினி பண்டார, தொழிலதிபர் எம்.எஸ்.எம்.ரனீஸ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...