தோப்பூர் பிரதேச செயலகம் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் - ரணிலுக்கு இம்ரான் கடிதம்தோப்பூர் பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம் கோரும் தோப்பூர் மக்களின் கோரிக்கை நியாயமானது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அந்த கடிதத்தில் மேலும் குறுப்பிடப்பட்டுள்ளதாவது

மூதூர் பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் தோப்பூர் பிரதேசத்தில் தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அப்பிரதேச சிவில் அமைப்புக்களால் கடந்த 30 வருடங்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்பின் கடந்த 2007 ஆம் ஆண்டுமுதல் அப்பகுதியில் உப பிரதேச செயலகம் இயங்கி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர விஜேவர்தனவிடம் நான் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டு தற்போது அதற்கான அமைச்சரவை பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதன் மூலம் அந்த பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் என இரண்டு சமூகங்களுமே பயனடையும். அபிவிருத்தியில் பெரும் பின்னடைவில் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் இரண்டு சமூகங்களும் இப்பிரதேச செயலகம் உருவாக்கம் மூலம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பதினைந்து கிலோமீட்டர் அப்பால் செல்ல வேண்டியதில்லை.

அத்துடன் இப்பிரதேச செயலகம் உருவாக்கம் அப்பிரதேசத்தில் புதிய உள்ளூராட்சி சபை ஒன்றையும் உருவாக்கி கொள்ள அது வாய்ப்பாக அமையும். இரண்டு சமூகங்களையும் சேர்த்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பலர் பயனடைய கூடிய இப்பிரதேச செயலக உருவாக்கத்திலோ அதன் எல்லைகளிலோ யாருக்காவது சந்தேகங்களோ ஆட்சேபனைகளோ காணப்படின் அவர்களுடன் கலந்துரையாடி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத சுமூகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன்.

ஆகவே தோப்பூர் பிரதேச செயலக உருவாக்கத்துக்கான வேலைகளை தொடந்தும் எதுவித தடைகளும் இன்றி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஊடகப் பிரிவு
தோப்பூர் பிரதேச செயலகம் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் - ரணிலுக்கு இம்ரான் கடிதம் தோப்பூர் பிரதேச செயலகம் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் - ரணிலுக்கு இம்ரான் கடிதம் Reviewed by NEWS on March 18, 2019 Rating: 5